கவியரசு கண்ணதாசனின் கடைசிப் புதல்வரும் திரைப்பட நடிகரும், பேச்சாளருமான கோபி கண்ணதாசன், தானும் தனது சகோதர்களும் வஞ்சிக்கப்படுவதாக பரபரப்பான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர், ‘அன்பான தமிழ் மக்களுக்கு, வணக்கம். கவியரசு கண்ணதாசன் அவர்களின், கடைசிப் புதல்வனான கோபி கண்ணதாசன் உங்கள் முன் மனம் திறக்க விரும்புகிறேன். நான் திரைப் படங்களில் நடித்துவருவதோடு, எங்கள் தந்தையார் கவியரசு கண்ணதாசன் பற்றிய உரைகளையும், இலக்கிய மேடைகளில் தந்துவருகிறேன். ஒரு சின்ன அறிமுகத்துக்காகவே இந்தத் தகவல்.
எங்கள் தந்தையார் கவியரசு கண்ணதாசன், திரையுலகில் தன் அமரத்துவம் வாய்ந்த பாடல்களாலும், திரைக்கதை வசனங்களாலும், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட கவித்துவமான எழுத்துக்களாலும் இன்றும் மக்கள் மனதில் நிலைத்த புகழோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார். மக்களால் கொண்டாடப்படும் அவரை, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த என் சகோதரர்களில் ஒரு சிலரே அலட்சியப்படுத்தி வருவதும், ஏனைய சகோதரர்களுக்குப் பல வகையிலும் அநீதி இழைத்து வருவதும் தொடர்கதையாக இருக்கிறது.
இதை மக்கள் முன் வைத்து நீதி கேட்பதற்காகத்தான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். எங்கள் தந்தையார் கண்ணதாசன் புரடெக்ஷன், விசாலாட்சி ஃபிலிம்ஸ், நேஷனல் பிக்சர்ஸ் உள்ளிட்ட 5 திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்ககளையும் நடத்தி வந்தார். அதன் மூலம் தயாரிக்கப்பட்ட படங்கள் இப்போதும் திரையரங்கம், தொலைக்காட்சி, மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால், இதற்கான ராயல்டி தொகை, பெருமளவில் வந்தும் கூட, கடந்த 45 ஆண்டுகளாக கவிஞரின் புதல்வர்கள் அனைவருக்கும் அது பகிர்ந்து தரப்படவில்லை. அண்ணாதுரை கண்ணதாசன் மட்டுமே அந்த காசோலைகளை காசாக்கி அனுபவித்து வருகிறார்.
அதேபோல் எங்கள் தந்தையார் கடைசி வரை வாழ்ந்த தி.நகர் வீட்டில் வாழ்ந்த ஒரு சிறு அறையைக் கூட அவர் நினைவாக விட்டு வைக்காமல், அதை அவரது படுக்கை அறையாக மாற்றி விட்டார். அந்த முழு கட்டிடத்தையும் வணிகக் கட்டிடமாக காந்தி கண்ணதாசன் பாவித்து வருகிறார். அதன் மூலமும் வருமானம் பார்த்துவருகிறார்.
இப்படி எங்கள் தந்தையாரின் அத்தனை வருமானத்தையும் ஒரு சிறு தொகையை ராயல்டியாக கொடுத்துவிட்டு எந்தவித கணக்கு வழக்கும் இல்லாமல் அபகரித்துக் கொண்டிருக்கிறார் எங்கள் மூத்த சகோதரரான திரு.காந்தி கண்ணதாசன்.
இப்படிப்பட்ட அநீதிகளுக்கு, எங்கள் இன்னொரு சகோதரான திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களையும் அவர் உறுதுணையாக ஆக்கிக்கொண்டு, என் மற்ற சகோதர சகோதரிகளையும் அவர் வஞ்சித்து வருகிறார்.
இது குறித்து நான் கேள்வி எழுப்பியதால், கவியரசர் கண்ணதாசன் பற்றிய தகவல் களஞ்சியமான விக்கி பீடியாவில் இருந்த எனது ‘கோபி கண்ணதாசன்’ என்ற பெயரில், எங்கள் தந்தையாரின் பெயரை வன்மமாக நீக்கிவிட்டு, வெறுமனே கோபாலகிருஷ்ணன் என்று மாற்றிவிட்டார். இதை நான் பலமுறை திருத்தியும் கூட, என் பெயரில் எங்கள் தந்தையாரின் பெயர் இல்லாதபடி பார்த்துக்கொள்கிறார். எனவே நீதி கேட்டு நான் விரைவில் சட்டப் போராட்டத்தையும் தொடங்க இருக்கிறேன். என் போராட்டங்களுக்கு தமிழக மக்கள் தார்மீக ஆதரவைத் தரவேண்டும் என்று இதன் மூலம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அடுத்தடுத்து விரிவாக இது குறித்து விவரிக்க இருக்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.