திமுக பொருளாளர் துரைமுருகன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில், ''திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக இல்லையா? என்ற கேள்விக்கு, இப்போது இல்லை, இன்னும் கூட்டணி அமைக்கவில்லை. அவர்கள் நண்பர்கள், எங்க கருத்தோடு ஒத்த கருத்தாக இருக்கிறார்கள். யார் யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற ஸ்டேஜ்க்கு நாங்கள் இன்னும் வரவில்லை'' என்றார்.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என்று துரைமுருகன் கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, திமுக தலைவர் கருத்து என்னவென்று அவர் சொல்லட்டும். அவ்வளவுதான். திமுக தலைவர்தான் இதனை தெளிவுப்படுத்த வேண்டும் என்றார் வைகோ.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த வைகோ, துரைமுருகன் மட்டும் திமுக இல்லை. அவர் திமுக பொருளாளர். என்னுடைய கல்லூரி நண்பர். எந்த அடிப்படையில் சொன்னார் என்று தெரியவில்லை. நாங்கள் ஆளுநர் மாளிகை முற்றகைப் போராட்டம் என்று அறிவித்திருக்கிறோம். அந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினோம். அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். கூட்டணியில் எந்த நெருடலும் வராது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியில் நான் இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.