
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்ளாதது; ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், கலந்து கொள்ளாதது; அண்மையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் உடனான காணொளி ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு மணி நேரம் காத்திருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி பேசாமல் மௌனம் காத்தது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுற்றிச் சுழன்று வருகிறது எடப்பாடி- செங்கோட்டையன் இடையேயான பனிப்போர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அதை அவர் கிட்ட கேளுங்க.. காரணம் அவரை கேட்டால் தானே தெரியும். என்னிடம் கேட்டால் எப்படி தெரியும்?. தனிப்பட்ட பிரச்சனையை பேசுகிற இடம் இது இல்லை. அவருக்கு வேலை இருக்கும். இது சுதந்திரமாகச் செயல்படுகின்ற கட்சி. திமுக மாதிரி அடிமை ஆட்கள் இங்கு கிடையாது. என்றைக்குமே நான் யாரையும் எதிர்பார்ப்பது கிடையாது' என தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், 2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 9:30 மணிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக, சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது அதிமுகவில் சலசலலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் சபாநாயகர் உடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், ''சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது வழக்கம். இன்று கூட ஆறேழு சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுகவை சார்ந்தவர்கள் சந்தித்தோம். என்னுடைய தொகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும் பொழுது அது குறித்து கவனயீர்ப்பு தீர்மானம் கொடுக்கச் சென்றேன். சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் அங்கு வந்தார். அவரிடமும் கடிதம் கொடுத்தேன்'' 'என்றார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு 'கொள்கை உயர்ந்தது; பாதை தெளிவானது' என சொல்லிவிட்டு அடுத்த கேள்விக்கு வாய்ப்பளிக்காமல் நகர்ந்தார்.