Skip to main content

‘தி.மு.க மாநகர பொறுப்பாளரை மாற்றுக’ - முதல்வரை சந்தித்து  வட்டச் செயலாளர்கள்!

Published on 15/03/2025 | Edited on 15/03/2025

 

DMK executive meeting  mk stalin demanding change of Municipal leader

புதுக்கோட்டை மாவட்டம் திமுக மாநகரச் செயலாளர் செந்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த பதவிக்கு அவரது மகன் கணேஷை நியமனம் செய்ய வேண்டும் என்றும், அதனால், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் நேரு மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாவட்ட பொறுப்பாளர்கள் சம்மதம் தெரிவித்தாலும், இந்த பதவிக்காக பல வருடங்களாக கட்சிப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பலரும்  மாநகர பதவி தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தங்களுடைய சுய விபர கோப்புகளைக் கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும், தங்களுக்கு பரிந்துரை செய்யக் கட்சியில்  ஒவ்வொருத்தரும் ஒருத்தரை பிடித்து வைத்துக்கொண்டு தலைமையின் அறிவிப்பிற்காக காத்திருந்தனர்.

இந்த நிலையில் தான் கடந்த 12 ஆம் தேதி திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் அறிவிப்பு புதுக்கோட்டை மாநகர திமுகவினரை கொந்தளிக்க வைத்துவிட்டது. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவின் ஆதரவாளரான வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளரான ராஜேஷ் திமுக மாநகர பொறுப்பாளராக நியமித்து அறிவிப்பு வெளியானது. இதுதான் மாவட்டத்தின் மொத்த வட்டச் செயலாளர்களையும் கொந்தளிக்க வைத்தது. அதன்பிறகு திமுக மாவட்ட அலுவலகம்  முற்றுகை, தர்ணா, சாலை மறியல் உள்ளிட்டவை நடந்து ஓய்ந்தது.

இதையடுத்து இந்தப் பிரச்சனையை கட்சித் தலைமை வரை கொண்டு செல்வதாக மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர் ரகுபதி, செல்லப்பாண்டியன் ஆகியோர் சமாதானம் செய்தனர். அதன் பிறகு நேற்று வெள்ளிக்கிழமை சென்னை அறிவாலயம் நோக்கி வட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்றனர். அங்கு அவர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி துணை முதல்வரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர் சரி செய்வதாக கூறிவிட்டார். எல்லாரும் ஊருக்கு செல்லுங்கள் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த  வட்டச் செயலாளர்கள் தலைவர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்து நியாயம் கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

தொடர்ந்து அறிவாலயம் சென்று புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளர் ராஜேஷ் மாற்றப்படவேண்டும் என்று 42 க்கு 38 வட்டச் செயலாளர்கள் கையெழுத்துப் போட்ட மனுவை கொடுத்தவர்கள் மாலை கலைஞர் அரங்கில் நடக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரும் முதலமைச்சரை சந்திக்க வழியிலேயே காத்திருந்தனர். மாலையில் கலைஞர் அரங்கம் சென்ற முதலமைச்சர் பலர் கூட்டமாக நிற்பதைப் பார்த்து என்ன என்று விசாரித்துள்ளார். உடனே அங்கு நின்ற அஞ்சுகம் மீனாட்சி சுந்தரம் புதுக்கோட்டை மாநகர பொறுப்பாளர் அறிவிப்பிற்கு எதிராக 42 வட்டச் செயலாளர்களில் 38 பேர் கையெழுத்திட்ட மனுவோடு தங்களைப் பார்க்க வந்துள்ளனர் என்று கூறி மனுவை கொடுத்துள்ளார். 

மனுவை முழுமையாக படித்த முதலமைச்சர் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி அனுப்பியுள்ளார். எங்கள் கோரிக்கையை தலைவரிடம் நேரில் கொடுத்துட்டோம். விரைவில் நல்ல நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறோம் என்கின்றனர் சென்னை சென்று திரும்பியுள்ள உ.பி.கள்.

சார்ந்த செய்திகள்