ஆயுதபூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து விடுமுறைகள் வந்ததால் வெள்ளிக்கிழமை (அக். 15) ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகரித்தது.
கரோனா தொற்று அபாயம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. தற்போது நோய்த்தொற்றின் வேகம் குறைந்து வருவதை அடுத்து, சுற்றுலாத்தலங்கள் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
எனினும், சுற்றுலாத்தலங்களுக்கு வரும் பயணிகளுக்கு முகக்கவசம் அணிதல், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமி அதையடுத்து வார விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை நாள்கள் வருவதால், சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை வெள்ளிக்கிழமை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.
மேகமூட்டமும், பனிப்பொழிவும், அவ்வப்போது சாரல் மழையும் என வித்தியாசமான காலநிலை நிலவியதை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து அனுபவித்தனர். ஏற்காடு ஏரியில் காதலர்கள், புதுமணத் தம்பதியினர் ஆகியோர் ஆர்வத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கிளியூர் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாவாசிகள், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், அண்ணா பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம், பகோடா பாயிண்ட் ஆகிய இடங்களையும் கண்டு ரசித்தனர். சேர்வராயன் கோயிலில் சென்று தரிசனம் செய்தனர். தொடர் விடுமுறை என்பதால் சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் வருகையால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், சாலையோர கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.