நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வியில் இருந்த அவருடைய ரசிகர்களுக்கு, 2017 டிசம்பர் 31ஆம் தேதி ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் என தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திடீரென்று ரஜினி, தனது உடல் நலம் கருதி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என அறிவித்தார். இது ரஜினி ரசிகர்களுக்கும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், விரும்பிய அரசியல் கட்சிகளில் ரஜினி மக்கள் மன்றத்தினர் சேரலாம் என ரஜினி அறிவித்தார். இதையடுத்து அவர்கள் திமுகவிலும், அதிமுகவிலும் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ரஜினியைக் குறித்தும், ரஜினி மக்கள் மன்றத்தைக் குறித்தும் தவறான கருத்துக்கள் வெளியிட்டதாகக் குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணைச் செயலாளர் ஆா்.எஸ்.ராஜன், சிறுபான்மையினர் பிரிவு தலைவர் சதீஷ் பாபு, மகளிரணிச் செயலாளர் ஈஸ்வரி ஆகியோர் ரஜினி மக்கள் மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆா்.எஸ்.ராஜன், “நான் 1986-ல் இருந்தே ரஜினி ரசிகராக இருந்துகொண்டு மன்றத்தின் பெயரில் பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்து வந்தேன். ரஜினி அரசியல் கட்சி துவங்குவேன் என்று அறிவித்த அன்றே நான், காங்கிரஸ் கட்சியில் வகித்துவந்த மாநில விவசாயக் காங்கிரஸ் செயலாளர் பதவியை ராஜினமா செய்துவிட்டு, ரஜினி மக்கள் மன்றத்தில் முழுநேர அரசியல் பணிகளை செய்து வந்தேன்.
அன்றிலிருந்து ரூ. 13.50 லட்சத்தை ரஜினி மக்கள் மன்றத்துக்காகப் பல்வேறு ரீதியில் செலவு செய்துள்ளேன். அவருடைய ‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னதுக்கு சமம்’ என்ற வசனத்தை நம்புவதுபோல், ஒரே முறை அரசியல் கட்சி துவங்குவதாகச் சொன்னதை அப்படியே நம்பினேன்.
ரஜினி மக்கள் மன்றத்தில் இணைச் செயலாளர் பதவியை, மக்கள் மன்ற நிர்வாகி என்னிடம் ரூ. 50 ஆயிரம் வாங்கிக்கொண்டுதான் தந்தார். ரஜினியுடன் இணைந்து நல்ல ஒரு அரசியல் பயணத்தைத் தொடரலாம் என்று நம்பியிருந்த என்னைப் போன்ற லட்சக்கணக்கானோரை அவர் ஏமாற்றி விட்டார். மேலும் ரஜினியை நம்பி காங்கிரஸ் கட்சியில் சீனியர் அந்தஸ்த்தையும் இழந்துவிட்டேன். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிவிட்டேன். எனவே, ரஜினி மீது மானநஷ்ட ஈடு வழக்கும், சுதாகர் மீதும் வழக்கு போட இருக்கிறேன்” என்றார்.