நாகை பகுதியில் சாராய வியாபாரிகளிடம் வசூல் நடத்திய மதுவிலக்கு பிரிவு போலீசார், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினர். அதில் 3 போலீசார் பணியிடை நீக்கமும், 17 போலீசார் திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பணியிடை மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள சாராய வியாபாரிகளிடம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், தொடர்ந்து வசூலில் ஈடுபட்டு வருவதாக நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளும், கணக்கில் வராத 75 ஆயிரத்து 630 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்ததோடு, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் பொறுப்பு ஆரோக்கிய டூனிக்ஸ்மேரி, உதவி ஆய்வாளர் சேகர், தலைமை காவலர் சரோஜினி உள்ளிட்ட மூவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி. மேலும் 17 போலீசாரை திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.