சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபடத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபடத் தடை விதித்து பதாகை வைத்திருந்தனர். பின்பு போலீஸ் பாதுகாப்புடன் பதாகை அகற்றப்பட்ட பின்பு பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபடத் தீட்சிதர்கள் அனுமதி மறுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், கனகசபையின் மற்றொரு வழியாக ஏறி வழிபட முயன்றனர். ஆனால், தீட்சிதர்கள் அவர்களை ஏறவிடாமல் தடுத்து கீழே தள்ளிவிட்டனர். இதனையடுத்து தீட்சிதர்கள் அனைவரும் கனகசபையைப் பூட்டிவிட்டு கீழே வந்து காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கோவில் நகையைத் திருட வந்தார்கள் எனக் கூறி தீட்சிதர்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இந்த நிலையில் கனகசபையில் பக்தர்கள் ஏறி சாமியைத் தரிசிக்கலாம் என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும் கோவிலில் பூஜை, அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுவதால், கனகசபைக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தால் கோவில் கால வழிபாட்டில் இடையூறுகள் ஏற்படும் என்றும், இதன் மூலம் தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஆதி கேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் உங்களுக்கு என்ன பாதிப்பு? வழக்கு தொடர நீங்கள் யார்? நீங்கள் என்ன தீட்சிதர்களா? கனகசபை மீது ஏறி மக்கள் தரிசித்தால் தீட்சிதர்கள் உரிமை எப்படி பாதிக்கப்படும்? அப்படி அவர்கள் உரிமை பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் உச்சநீதிமன்றத்தை நாடவில்லை? தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படுவதாக 3வது நபர் எப்படி வழக்குத் தொடர முடியும் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.