கரோனா தொற்று காரணமாக போதிய இடவசதிகள் இல்லாததால் சென்னை கோட்டையில் நடைபெற வேண்டிய சட்டசபை கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு நேற்று சட்டமன்றம் கூடியது.
இன்று இரண்டாம் நாளாக சட்டமன்ற கூட்டம் நடந்துவரும் நிலையில், இன்றையை கூட்டத்தொடரில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் நீட் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் காரசாரமாக மோதினார்கள். நீட் தொடர்பாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "இன்னும் 8 மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக கூறுகின்றதே அது எப்படி, என்ன வழி வைத்துள்ளார்கள் என்று கூறினார்கள் என்றால் அதை இப்போதே செய்ய அதிமுக அரசு தயாராக இருக்கின்றது" என தெரிவித்தார். அவரின் இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.