நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியிலும், நீதித்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் கண்ணன். வழக்கறிஞரான இவர் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் கண்ணனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அரிவாளால் வெட்டியவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தவர் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் என்பது தெரியவந்துள்ளது.
நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் முன்விரோதம் காரணமாக வெட்டியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ரமணி (வயது 26) என்பவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.