வேலூரில் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 14-வயதுடைய சிறுமி. தனது வீட்டின் அருகே இரவு 7 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற போது, அங்கு மது அருந்திக்கொண்டு இருந்த 3 பேர் சிறுமியின் வாயை பொத்தி அங்குள்ள கல்குவாரிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் மது போதையில் மூவரும் அந்த சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மகள் நீண்ட நேரமாக வராததால் டார்ச் லைட் எடுத்துக் கொண்டு மகளைத் தேடி தந்தை சென்றுள்ளார்.
அப்போது கல்குவாரி அருகே மகளின் அலறல் சத்தம் கேட்க அந்த இடத்தை நோக்கி சிறுமியின் தந்தை சத்தமிட்டபடி ஓடியுள்ளார். இதனை அறிந்த அந்த மூன்று பேரும், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களை பிடிக்க முடியாமல் திரும்பி வந்து பார்த்தபோது தனது மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது வெளியே தெரிந்தால் தனது குடும்பத்துக்கு அவமானம் என நினைத்து போலீசில் புகார் கொடுக்காமல் உறவினர் வீட்டுக்கு தனது மகளை அனுப்பி வைத்துள்ளார்.
உடல்நிலை சரியாகாமல் இருந்ததால் இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் சென்று புகார் தந்துள்ளார். ஆனால், இது வேப்பங்குப்பம் போலீஸ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என கூறியுள்ளனர். மீண்டும் பள்ளிகொண்டா காவல் நிலையம் வந்த அவரை திரும்ப அங்கே அனுப்பியுள்ளனர். இப்படி பள்ளிகொண்டா காவல் நிலையமும் வேப்பங்குப்பம் காவல் நிலையம் மாறி மாறி அவரை அலைக்கழித்துள்ளனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனுக்கு தகவல் தெரிந்த பின் அவர் உத்தரவின் பேரில் சிறுமியின் தந்தை வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் போக்சோ சட்டத்தின் கீழ் வீரப்பன்(28), இளமதன்(28), சின்னராசு(30) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். பின்னர் இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மூன்று பேரையும் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.