மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலோடு உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் இன்று (20-11-24) இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், உத்தரப் பிரேத மாநிலம் கர்ஹாலில் உள்ள கஞ்சாரா நதி பாலம் அருகே இளம் வயது பெண்ணின் உடல், நிர்வாணமான நிலையில் சாக்கு பையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சாக்கு பையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், கர்ஹால் இடைத்தேர்தலில் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கும் விருப்பத்தில் இருந்துள்ளார். இதனை அறிந்து கோபத்தில் இருந்த பிரசாந்த் யாதவ் என்பவர், சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்த பெண்ணை பிரசாந்த் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த பெண் தனது முடிவு மாற்றிக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் தான், அவரது உடல் ஒரு சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது.
பிரசாந்த் யாதவ் என்பவர் தான் பெண்ணை கொலை செய்துள்ளதாகவும், கொலை செய்வதற்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, பிரசாந்த் யாதவ் மற்றும் மற்றொரு நபரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 1993 ஆம் ஆண்டு முதல் சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில், அகிலேஷ் யாதவின் மருமகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சி நிறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.