Skip to main content

ராமு உடலுக்கு பதிலாக அய்யாவு உடலை கொடுத்த மருத்துவமனையினர்..! தகனம் செய்த உறவினர்கள்!!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

Hospitals who gave Ayyavu's body instead of Ramu's body Cremated relatives

 

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை மாற்றி கொடுத்ததாக உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு. இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அய்யாவு வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார்.

 

இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார் அய்யாவு. அப்போது அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

அங்கு கடந்த 3 நாட்களாக சிகிச்சையில் இருந்த அய்யாவு, நேற்று முன்தினம் (18.04.2021) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இறந்த அய்யாவுவின் உடலை வாங்க அவரது உறவினர்கள் வந்தனர். ஆனால் பிரேத பரிசோதனை கூடத்தில் அய்யாவுவின் உடல் இல்லாதது தெரிந்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் உடலுக்குப் பதிலாக அய்யாவுவின் உடல் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டதும் தெரியவந்தது.

 

Hospitals who gave Ayyavu's body instead of Ramu's body Cremated relatives

 

மேலும், அய்யாவுவின் உடலைப் பெற்றுக்கொண்டு சென்றவர்கள் அவரது உடலை தகனம் செய்துவிட்டதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யாவுவின் உறவினர்கள் க.விலக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து அய்யாவுவின் உறவினர்களிடம் போலீஸ் ஏ.டி.எஸ்.பி. சங்கரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

 

இது சம்பந்தமாக அவரது உறவினர்களிடம் கேட்டபோது, “மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் அய்யாவுவின் உடல் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மன வேதனையில் உள்ளோம். உடலை மாற்றி கொடுத்து தவறு செய்த மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்கள். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்