Skip to main content

ஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் அண்ணன் பரபரப்பு சாட்சியம்!

Published on 04/09/2018 | Edited on 05/09/2018
sd


கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய அண்ணன் கலைச்செல்வன் இன்று (செப்டம்பர் 4, 2018) நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் & சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). இன்ஜினியரிங் பட்டதாரி. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.

ஆரம்பத்தில் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு பின்னர் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தன்னுடன் படித்து வந்த மாணவி சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்திருப்பது தெரிய வந்தது.

கோகுல்ராஜ், பட்டியல் இனத்தைச் சார்ந்தவர். அந்த மாணவி கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பேசிக்கொண்டிருந்ததை அறிந்த, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட சிலர், 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி மாலை, சுவாதியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, கோகுல்ராஜை மட்டும் காரில் கடத்திச் சென்றிருப்பது அங்குள்ள சிசிடிவி கேமரா ஃபுட்டேஜில் பதிவாகி இருந்தது.
 

sd


இந்த சம்பவங்களின் அடிப்படையில் யுவராஜூம் அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்து, ரயில் தண்டவாளத்தில் சடலத்தை வீசி இருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து யுவராஜ், அவருடைய சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்கிற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, இதுபோன்ற ஆணவக்கொலை வழக்குகளை 18 மாதங்களுக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 10.10.2017ம் தேதி தீர்ப்பு அளித்து இருந்தது. அதன்படி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கின் சாட்சிகள் மீதான விசாரணை கடந்த 30.8.2018ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில், சொத்துப்பிரச்னையில் கணவர் சந்திரசேகரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஜோதிமணி, ஜாமினில் விடுதலையான பின்பு தலைமறைவாகிவிட்ட அமுதரசு ஆகியோர் தவிர மற்ற 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த வழக்கில் அரசுத்தரப்பில் மொத்தம் 110 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழ க்கறிஞர் சேலத்தைச் சேர்ந்த கருணாநிதி மற்றும் மற்றொரு அரசுத்தரப்பு வழக்கறிஞர் மாதேஸ்வரன், சிறப்பு வழக்கறிஞருக்கு உதவியாக சந்தியூர் பார்த்திபன், நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதாடுகின்றனர்.
 

sd


முதல் சாட்சியாக கோகுல்ராஜின் தாயார் சித்ராவிடம் கடந்த 30ம் தேதி அரசுத்தரப்பு வழக்கறிஞர் விசாரணை நடத்தினார். அன்று அவர், காணாமல் போன அன்று கோகுல்ராஜ் அணிந்திருந்த உடைகளை அடையாளம் காட்டினார். அதன்பின்னர் செப்டம்பர் 1ம் தேதி, எதிரிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ சித்ராவிடம் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அவர் கேட்ட சில கேள்விகளுக்கு சித்ரா, சற்று முன்னுக்குப்பின் முரணான பதில்களைக் கூறினார்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 4, 2018) அடுத்த சாட்சியான காவேரி ஆர்எஸ் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான கைலாஷ்சந்த் மீனாவிடம் காலையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரயில் தண்டவாளத்தில் கிடந்த கோகுல்ராஜின் சடலம் பற்றியும் அதுபற்றி, ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது குறித்த விவரங்களையும் கூறினார்.

அவரைத் தொடர்ந்து கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன் சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறியது:

என் தம்பி கோகுல்ராஜ் எங்கே சென்றாலும் அம்மாவிடம் சொல்லிவிட்டுத்தான் செல்வார். எங்கு சென்றிருந்தாலும் சாயங்காலம் வீடு திரும்பி விடுவார். கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி வீட்டில் இருந்து காலையில் கிளம்பிச் சென்றார். அவன் எங்கே சென்றான் எனத்தெரியாததால் செல்போனில் தொடர்பு கொண்டோம். சுவிட்ச்ஆப் ஆகியிருந்தது. பிறகு காலை 10.30 மணியளவில் அவனே என் அம்மாவுக்கு போன் செய்து, நண்பர்களைப் பார்க்கச் செல்கிறேன். சாயங்காலம் வந்து விடுகிறேன் என்று கூறினான்.
 

sd



ஆனால் அன்று இரவாகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. அவனுடைய நண்பர்கள் சிலரிடம் விசாரித்தோம். அப்போது அவன் காலையில் தன்னுடைய கல்லூரி பேருந்தில் ஏறிச்சென்றதும், திருச்செங்கோடு ஓம் காளியம்மன் கோயில் அருகே இறங்கிக் கொண்டதும் தெரிய வந்தது.

பிறகு, அவனுடைய வேறு நண்பர்களின் செல்போன் நம்பர்கள் கிடைக்குமா என்று கோகுல்ராஜின் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடிப்பார்த்ததில் பாலமுருகன் என்ற மாணவரின் செல்போன் எண் கிடைத்தது. அதைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் வேறு வகுப்பில் படித்ததால் அவனைப்பற்றி அவ்வளவாக தெரியாது. அவனுக்கு நெருக்கமான நண்பர் கார்த்திக்ராஜா என்பவரை தொடர்பு கொண்டால் ஏதாவது விவரங்கள் தெரியும் என்று கூறி, அவருடைய செல்போன் நம்பரை கொடுத்தார்.

அதன்பிறகு கார்த்திக்ராஜாவை தொடர்பு கொண்டு பேசினேன். அவர், ''என் தம்பியும், அவனுடன் படித்து வந்த சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பேசிக்கொண்டு இருந்தபோது, சிலர் அங்கு வந்து யுவராஜ் என்பவர் உன்னை கூப்பிடுகிறார் என்று கூறி அழைத்துச்சென்றனர். அங்கே யுவராஜூம் மற்றும் அஞ்சாறு பேரும் இருந்தனர்.

கோகுல்ராஜிடம் நீ என்ன ஜாதி? நீயும் அந்த பொண்ணும் காதலர்களா? என்று யுவராஜ் கேட்டார். அதற்கு கோகுல்ராஜ் இல்லை என்று சொன்னதால், அவனை தலையில் அடித்துள்ளார். அதன்பிறகு அவனும், 'ஆமாம், நான் அந்தப் பொண்ணை காதலிக்கிறேன்' என்று கூறினான். அதையடுத்து சுவாதியிடம் இருந்த செல்போனை பிடிங்கிக் கொண்டு அவரை மட்டும் தனியாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கோகுல்ராஜின் செல்போனையும் பறித்துக்கொண்ட அந்த கும்பல் அவனை வெள்ளை நிற காரில் கடத்திச்சென்றனர். அந்த காரில் 'தீரன் சின்னமலை' என்று எழுதியிருந்தது. முன்பக்கம் பச்சை, சிவப்பு நிறத்தில் கொடி கட்டப்பட்டு இருந்தது,'' என்று கார்த்திக்ராஜா சொன்னார். இந்த விவரங்களை எல்லாம் அவர் சுவாதியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதாக என்னிடம் கூறினார்.

கார்த்திக்ராஜாவிடம் சுவாதியின் செல்போன் நம்பர் கேட்டுப் பெற்றேன். 24.6.2015ம் தேதி காலை சுவாதியை செல்போனில் அழைத்தபோது சுவிட்ச்ஆப் என்று வந்தது. பிறகு கார்த்திக்ராஜாவிடம் சுவாதியின் அம்மா நம்பரைப் பெற்று அதில் தொடர்பு கொண்டபோது சுவாதியே எடுத்துப் பேசினார்.

கோகுல்ராஜ் பற்றி விசாரித்தபோது கார்த்திக்ராஜா என்னிடம் சொன்ன எல்லா விவரங்களையும் அவரும் சொன்னார். அதன்பிறகே நாங்கள் கோகுல்ராஜை காணவில்லை என்று திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அப்போது வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன் என்பவரும் எங்களுக்கு உதவியாக காவல் நிலையம் வந்திருந்தார்.

நாங்கள் அங்கு இருக்கும்போதே, ஈரோடு ரயில்வே போலீசார் என் அம்மாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, கிழக்கு தொட்டிபாளையம் என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் ஒரு சடலம் கிடப்பதாகவும், அங்கே இருந்து எடுக்கப்பட்ட அடையாள அட்டையில் இருந்த செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு பேசுவதாகவும் கூறினர்.

நாங்கள் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கே கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தான். தலை மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட், சாம்பல் மற்றும் ஊதா நிற சட்டை, கருப்பு நிற காலருடன் கூடிய பனியன் ஆகிய உடைகளை வைத்து சடலத்தை அடையாளம் காட்டினோம்.

அந்த இடத்தில் இருந்து அவனுடைய செல்போன், கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்ததாக போலீசார் கூறினர். ஆனால் அவன் எப்போதும் வைத்திருக்கும் கருப்பு நிற பர்ஸ் பற்றி போலீசார் கூறவில்லை. அதில்தான் அவனுடைய ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருப்பான்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருச்செங்கோடு போலீசார், யுவராஜ் என்பவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். அவருக்கு போலீசார் போன் செய்து உடனடியாக வருமாறும் அழைத்தனர். இதற்கிடையே நாங்கள் கோகுல்ராஜ் வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்யாமல் கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி நாங்கள் போராடினோம். பகுஜன் சமாஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராடினர்.

கோகுல்ராஜின் உடலை மூன்று டாக்டர்கள் கொண்ட குழுவின் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்ததால், அதன்படியே பிரேத பரிசோதனையும் நடந்தது. இந்நிலையில், 2.7.2015ம் தேதி இந்த வழக்கில் 6 பேரை கைது செய்திருப்பதாக திருச்செங்கோடு போலீசார் கூறினர். அதன்பிறகே நாங்கள் கோகுல்ராஜின் சடலத்தை வாங்கிச்சென்று எங்கள் ஊரில் அடக்கம் செய்தோம்.

இவ்வாறு கலைச்செல்வன் சாட்சியம் அளித்துள்ளார்.

இதன்பிறகு, சம்பவத்தன்று கோகுல்ராஜ் அணிந்திருந்த உடைகளை கலைச்செல்வன் நேரில் பார்த்து அடையாளம் காட்டினார். இத்துடன் இன்றைய சாட்சி விசாரணை முடிந்தது. இதையடுத்து, வரும் 6ம் தேதி சாட்சி மீதான குறுக்கு விசாரணை நடைபெறும் என்று கூறி வழக்கை நீதிபதி கே.ஹெச்.இளவழகன் ஒத்தி வைத்தார்.

சாட்சிகள் விசாரணை முடிந்து குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 15 பேரையும் சிறையில் அடைக்க போலீசார் வாகனத்தில் ஏற்றுவதற்காக அழைத்துச்சென்றனர். அப்போது அவர்களைப் பார்த்த கோகுல்ராஜின் தாயார் சித்ராவும், அவருடைய உறவினர்களும் மண்ணை வாரி தூற்றி சாபமிட்டனர். இதைப் பார்த்த அங்கு பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த போலீசார் நீதிமன்ற வளாகத்தில் இதுபோல் செய்யக்கூடாது என்று அவர்களைக் கண்டித்தார். அதற்கு கோகுல்ராஜின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்