'தேர்தல் நேரத்தில் பொய்யைச் சொல்லி வாக்கைப் பெற்று ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகு ஓட்டு போட்ட மக்களை மறந்த முதல்வர் தான் மு.க.ஸ்டாலின்' என எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
கட்சிப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''இன்றைய முதல்வர் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தேர்தல் அறிக்கை வெளியிட்டார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுமானப் பொருட்கள் விலை ஏறுகின்ற பொழுது அதை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு கட்டுமானப் பொருட்கள் விலை தாறுமாறாக ஏறி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றது. சட்டமன்றத்தில் நான் இரண்டு முறை பேசியிருக்கிறேன் போன ஆண்டும் பேசினேன் இந்த ஆண்டும் பேசினேன் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது, நீங்கள் உங்கள் தேர்தல் அறிக்கையில் கட்டுமான பொருட்களின் விலையை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு குறைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னீர்கள் என்று கேட்ட பொழுது, அதை நாங்கள் சரி செய்து விடுவோம் என்று சொன்னார்கள்.
இன்று வரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஏழைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள் கிராமப் பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் 100 நாள் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் சொன்னார் திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும் என்று சொன்னார். இதுவரைக்கும் இரண்டு ஆண்டு காலம் முடிந்து மூன்றாவது வருடம் வந்துவிட்டது. இதுவரைக்கும் அந்த திட்டத்துக்கு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. தேர்தல் நேரத்தில் பொய்யைச் சொல்லி வாக்கைப் பெற்று ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகு ஓட்டு போட்ட மக்களை மறந்த முதல்வர் தான் மு.க.ஸ்டாலின்'' என்றார்.