கிருஷ்ணகிரியில் புதையல் இருப்பதாக, நண்பனையே வெட்டி நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ளது புதூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் விவசாய தொழில் செய்து வந்த லட்சுமணனுக்கு நாகராஜ், சிவக்குமார் என்ற இரு மகன்களும் தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர். அவரது மனைவி நான்காண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள வெற்றிலை தோட்டத்தில் ஒன்றை அடி குழியில் விவசாயி லட்சுமணன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலுக்கு முன் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், கோழி உள்ளிட்ட பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தார் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீசார் மணி என்ற நபரை கைது செய்தனர் விசாரணை செய்ததில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு லட்சுமணன் மகளுக்கு பேய் பிடித்திருந்ததாகவும், அதை ஓட்டுவதற்காக சிரஞ்சீவி என்ற சாமியாரை கூட்டி வந்ததாகவும் நண்பன் மணி தெரிவித்துள்ளார். பூஜைகள் செய்துவிட்டு கிளம்பும்போது வெற்றிலை தோட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் புதையல் இருப்பதாகவும் நரபலி கொடுத்தால் அந்த புதையலை எடுத்து விடலாம் என்று சாமியார் சிரஞ்சீவி கூறிச் சென்றுள்ளார். இதில் ராணி என்ற பெண்ணை நரபலி கொடுக்க திட்டமிடப்பட்ட நிலையில் அவர் வராததால் புதையலை எடுத்தே ஆக வேண்டும் என்ற ஆசையில் மணி, நண்பன் லட்சுமணையே கொலை செய்து நரபலி கொடுத்தது அம்பலமானது. ஆனால் புதையல் கிடைக்காததால் அங்கிருந்து மணி தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.