அண்மையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா சென்றவர்கள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து அதிகாலையில் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து நீலகிரி பகுதிக்கு சுற்றுலாவிற்கு 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சுற்றுலா பேருந்து ஒன்றில் வந்துள்ளனர். இன்று அதிகாலை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு தூரிப்பாளையம் பகுதியில் பேருந்து வந்த பொழுது பேருந்தின் பின் சக்கரத்தில் திடீரென தீப்பிடித்தது. பேருந்துக்கு பின்னே வந்த மற்ற வாகன ஓட்டிகள் சுற்றுலா பேருந்து ஓட்டுநரிடம் இது குறித்து தெரிவித்தனர். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு கல்லூரி மாணவர்கள் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்டனர்.
மறுபுறம் பேருந்து மல மல என தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வெகுநேரமாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பேருந்தின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள், ஓட்டுநர் என யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.