நடிகர் தனுஷ் நடித்துள்ள '3' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒய் திஸ் கொலவெறி' பாடலின் காப்புரிமையை மீறியது தொடர்பாக சோனி மியூசிக் நிறுவனத்துக்கு எதிராக ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நடிகர் தனுஷ் நடித்து, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடலின் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையைப் சோனி மியூசிக் நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால் காப்புரிமையை மீறி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் சோனி மியூசிக் நிறுவனம் அந்த பாடலை வெளியிட்டது.இதற்கு எதிராக '3' பட தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சோனி மியூசிக் இயக்குநர் சுமித் சட்டர்ஜி மற்றும் நிறுவன அதிகாரிகள் அஸ்வின், அசோக் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கிற்கு எதிராக சோனி நிறுவனம், அதன் இயக்குனர் சுமித் சட்டர்ஜி மற்றும் நிறுவன அதிகாரிகள் அஸ்வின், அசோக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சோனி மியூசிக், அதன் இயக்குனர் சுமித் சட்டர்ஜி மற்றும் நிறுவன அதிகாரிகள் அஸ்வின், அசோக் ஆகியோர் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதால், அவர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.