சேலம் பகுதியை ராஜம் சுக்கு காப்பி என்ற தங்கள் நிறுவனத்தின் பெயரை வேறு ஒரு நிறுவனம் பயன்படுத்துவதாக ராஜம் ஹெர்பல் டெக்னாலஜீஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அதில், சேலத்தில் ‘ராஜம் மற்றும் ராஜம் சுக்கு காப்பி’ என்ற டிரேட் மார்க்கை பதிவு செய்து சுக்கு கசாயம் மிக்ஸ், சுக்கு காப்பி மிக்ஸ், பனங்கற்கண்டு, தூதுவலை மிட்டாய், ராகி,பாதம் மற்றும் ரோஸ் மில்க் மிக்ஸ் அண்ட் ஆகியவற்றைக் கடந்த 1989 ம் ஆண்டு முதல் தமிழகம் மற்றும் சென்னையிலும் ராஜம் ஹெர்பல் டெக்னாலஜீஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் தங்களுடைய டிரேட் மார்க்கை பயன்படுத்தி ‘ஜெயம் ராஜம் சுக்கு காப்பி’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் தங்கள் நிறுவனத்தைப் போல சுக்கு காப்பி மிக்ஸ், சுக்கு கசாயம் உள்ளிட்ட பொருட்களை சுரேஷ் என்பவரும், சென்னை சண்முகநாதன் அன் கோ நிறுவனமும் விற்பனை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக தங்களுடைய நிறுவன பெயரைப் பயன்படுத்தக் கூடாது என அந்நிறுவன உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியும், தொடர்ந்து ராஜம், ராஜம் சுக்கு காப்பி பெயரைப் பயன்படுத்தி வருவதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ராஜம் சுக்கு காப்பி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காப்புரிமை விதிகளை மீறி செயல்படும் சேலம் ஜெயம் ராஜம் சுக்கு காப்பி நிறுவனம், ராஜம் என்ற பெயரையும், ராஜம் சுக்கு காப்பி என்ற பெயரையும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என ராஜம் சுக்கு காப்பி நிறுவனத்தின் சார்பில் ஆர்த்தி, சிவகாமசுந்தரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் கணபதி ஆஜராகி, காப்புரிமை விதிகளை மீறி தங்களுடைய நிறுவனம் பெயரை ஜெயம் ராஜம் காப்பி நிறுவனம், சென்னை சண்முகநாதன் அன் கோ நிறுவனம் பயன்படுத்தி லாபமடைந்திருப்பதால் ராஜம், ராஜம் சுக்கு காப்பி என்ற பெயரை நிரந்தரமாகப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதி ராஜம் மற்றும் ராஜம் சுக்கு காப்பி என்ற பெயரை பயன்படுத்தச் சேலத்தைச் சேர்ந்த ஜெயம் ராஜம் சுக்கு காப்பி நிறுவனம் நிறுவனம், சென்னை சன்முகநாதன் அன் கோ - விற்கு இடைக்கால தடை விதித்ததோடு, இந்த வழக்கு தொடர்பாக அந்நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப் 27 ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.