கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வரலாறு காணாத அதி கன மழைப்பொழிவை ஏற்படுத்திய வளிமண்டல சுழற்சி தற்பொழுது விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி காயல்பட்டினத்தில் 21 சென்டிமீட்டர் மழை இன்று பதிவாகியுள்ளது. நேற்று 95 சென்டி மீட்டர் மழை காயல்பட்டினத்தில் பதிவாகிய நிலையில் இன்று 21 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 23.1 சென்டி மீட்டர் மழையும், குலசேகரப்பட்டினம் 18.4 சென்டி மீட்டர், ஸ்ரீவைகுண்டம் 17.4 சென்டி மீட்டர், சாத்தான்குளம் 15.6 சென்டி மீட்டர் தூத்துக்குடி 13.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.