![Heavy rain for 5 days; Chance of very heavy rain in 2 districts](http://image.nakkheeran.in/cdn/farfuture/R5d0cf2h0PwnhSvnCBX2AkUfEY89ZFGAaFSnt_MvQrI/1688300325/sites/default/files/inline-images/n99_0.jpg)
இன்று கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாகவும், மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருவாரூர், நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும், சென்னை புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.