முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முரசொலி பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியருமான முரசொலி செல்வம் (வயது 82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (10.10.2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “முரசொலி செல்வம் எனும் திமுகவின் கொள்கைச் செல்வத்தை, திராவிட இயக்கத்தின் படைக்கலனை இழந்துவிட்டோம். உங்களில் ஒருவனான எனக்கு உடன்பிறப்புகளான நீங்களும், உடன்பிறப்புகளான உங்களுக்கு உங்களில் ஒருவனான நானும் ஆறுதல் தெரிவித்து நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டிய வேதனை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இயக்கப் பணிகளிலும் இயக்கத்தின் கொள்கை முரசமான முரசொலி பணியிலும் நான் காட்டிய ஆர்வத்தை உணர்ந்து என் விரல்பிடித்து வழிகாட்டியவர் முரசொலி செல்வம்தான். எனக்கு நேரம் வாய்க்கும்போதெல்லாம் அவரைச் சந்தித்து அரசியல் செய்திகளை அறிந்துகொள்வேன். அவருக்குப் பேரறிஞர் அண்ணாவிடம் நிறைய பற்று உண்டு.
அண்ணாவை அவர் அடிக்கடி சந்தித்துப் பேசுவதும் உண்டு. அண்ணா சொன்ன செய்திகளை - வரலாற்றுத் தகவல்களை என்னிடம் பகிர்ந்துகொள்வார். அதுபோல கலைஞரிடம் பேசியதையும் பகிர்ந்துகொண்டு இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குவார். திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள், கடிதங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, 'தினபலன்' என்ற தலைப்பில் தொகுத்து வந்தேன். அது முரசொலியில் தொடர்ந்து வெளிவந்தது. நான் எழுதித் தருவதை முரசொலி ஆசிரியர் குழுவினர் வடிவமைப்பதை ஆர்வத்துடன் கவனித்து, அதனையும் கற்றுக்கொள்ள விரும்பியபோது, வடிவமைப்பு பற்றி எனக்கு சொல்லிக் கொடுத்த ஆசான் முரசொலி செல்வம்தான்.
நெருக்கடிநிலைக் காலத்தில் திமுகவும், கலைஞரும் கடும் சோதனைகளை எதிர்கொண்டபோது தனிமைச்சிறை போன்ற சூழலில் இருந்த கலைஞருக்குத் துணையாக இருந்து தோள் கொடுத்தவர்களில் முதன்மையானவர் செல்வம். அ.தி.மு.க. ஆட்சியில் இயக்கமும் முரசொலியும் எதிர்கொண்ட சவால்களின்போதும் கலைஞரின் கட்டளைகளை நிறைவேற்றும் செயல்வீரராக இருந்தவர் செல்வம். திருச்செந்தூர் திருக்கோயிலின் அறநிலையத்துறை அதிகாரி கொலை செய்யப்பட்ட உண்மை வெளிப்பட்ட ஆத்திரத்தில் அன்றைய ஆட்சியாளர்கள் காவல்துறையை ஏவி முரசொலி செல்வத்தை, சட்டமுறைகளுக்குப் புறம்பாகக் கைது செய்து, அலைக்கழித்தனர். அந்த நிலையிலும், எந்த நிலையிலும் அவர் நெஞ்சுரத்துடனேயே நெருக்கடிகளை எதிர்கொண்டார்.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமரானபோது முரசொலி மாறன் ஒன்றிய அரசில் கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதனால், அவர் வகித்த முரசொலியின் ஆசிரியர் பொறுப்பை யார் ஏற்பது என்றபோது, தன் மூத்த பிள்ளையாகிய முரசொலி எனும் திராவிடச் செல்வத்தை செல்வத்திடம் ஒப்படைத்தார் கலைஞர். அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் முரசொலியை மேலும் மேலும் கூர்தீட்டிய படைக்கலனாக மாற்றியவர் முரசொலி செல்வம். தன்னுடைய பணியை முடித்துவிட்டு, வடிவமைப்பு செய்து, அச்சுக்கு அனுப்பச்சொல்லிவிட்டு அவர் வீடு திரும்ப நள்ளிரவுக்கு மேல் ஆகிவிடும். அமைதியாகத் தோற்றமளித்தாலும் ஆழத்திலிருந்து பீறிட்டு அடிக்கும் நெருப்புக் குழம்பைக் கக்கும் எரிமலை அவருடைய எழுத்துகள். அவருடைய கைவண்ணத்தில் உருவான சின்ன பெட்டிச் செய்திகூட 'அக்கினிக் குஞ்சு' போல அதிகாரக் காடுகளைப் பற்றவைத்து - பதற வைத்திருக்கிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளில், அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்வுடன் முரசொலி அலுவலகம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், அடுத்தநாளே முரசொலி தடையின்றி வெளிவருவதில் முழுமூச்சுடன் செயல்பட்டு, கலைஞரின் மனக்காயங்களுக்கு மருந்திட்டவர். அ.தி.மு.க ஆட்சியில் முரசொலியில் வெளியான செய்திக்காகக் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் வகையில், சட்டப்பேரவைக்குள் கூண்டு கொண்டுவரப்பட்டு, அதில் ஏற்றப்பட்டார் முரசொலி ஆசிரியரான அண்ணன் செல்வம். கலைஞரின் ஆலோசனைப்படி கருப்புச் சட்டை அணிந்து கூண்டிலேறிய கொள்கைச் சிங்கம் அவர். மன்னிப்பு கேட்க மறுத்த அசல் மனோகரனாக, பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாத்த கருத்துரிமைப் போராளி. அதனால்தான், 'கூண்டு கண்டேன் - குதூகலம் கொண்டேன்' என்று கொள்கைத் தங்கமான அண்ணன் செல்வத்தைப் பெருமிதத்துடன் பாராட்டினார் கலைஞர்.
சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் பின்னிய எழுத்துவலையில் சிக்காத அரசியல் எதிரிகள் இல்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக, முரசொலியின் ஆசிரியராக முரசொலி செல்வம் பணியாற்றிய நிலையில்தான், 2017ஆம் ஆண்டு முரசொலியின் பவளவிழாவைக் கொண்டாடினோம். அதன்பிறகு, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் அரங்கேறிய 'முரசொலி: சில நினைவலைகள்' நூல் வெளியீட்டில் என்னுடன் மீண்டும் மேடையைப் பகிர்ந்து கொண்டார். அரசியல் கடந்து அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடியவர். அதிகாரப் பதவிகள் மீது எந்தவித நாட்டமும் இல்லாமல், அரசியல் விளம்பரங்களுக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அத்தனை பணிகளையும் பொறுப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றிய பேராற்றலுக்குச் சொந்தக்காரர். இளைஞரணி தொடங்கி இன்றைய நிலை வரை என் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் முரசொலி செல்வம் இருக்கிறார். என்னைப் பெற்றெடுத்த கலைஞர் - தயாளு அம்மையாரைப் போல நான் மதித்து, என் பிறந்தநாளில் வாழ்த்து பெறுவது செல்வத்திடம்தான். 'ஒரு சிலநாட்கள் பெங்களூரு வந்து ஓய்வெடுக்கலாமே' என்று என்னைச் சில நாட்கள் தன் வீட்டில் ஓய்வெடுக்க அழைத்தவர், நம்மை விட்டுவிட்டு நிரந்தர ஓய்வெடுக்கச் சென்றுவிட்டாரே.
என் பொதுவாழ்வுப் பயணத்தில் துணையாய் நிழலாய் இருந்த பெருஞ்செல்வத்தை இழந்து நிற்கையில் எப்படி என்னை நானே தேற்றிக் கொள்வேன். தன் வாழ்வின் செல்வமாகக் கருதி ஈருடல் ஓருயிராய் வாழ்ந்த என் அன்புத் தங்கைக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்?. குடும்பத்தினரை எப்படித் தேற்றுவேன்? முரசொலி குழுமத்தினருக்கு என்ன வார்த்தைகள் சொல்வேன்?. குலுங்கி அழுதிட மிச்சமிருந்த தோளை நான் இழந்தேன். திமுக கொள்கைத் தூண் ஒன்றை நாம் இழந்தோம். 'போய்விட்டீர்களே.. போர்முரசே.. திராவிட முரசொலித்த செல்வமே' என்று எனக்குள் கதறி, என் வேதனையிலிருந்து மெல்ல மீண்டிட முயற்சி செய்கிறேன். முரசொலி செல்வம் மறையவில்லை! உதயசூரியனின் கதிராக ஒளிவீசி நமக்கு என்றும் வெளிச்சம் தருவார்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.