திருவண்ணாமலையில் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் ஓட்டுநரின் கை சிக்கி படுகாயமடைந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் குன்னத்தூர் கிராமத்தில் வயலில் நெல் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதற்காக நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. நெல் அறுவடைக்காக இயந்திரத்தை கொண்டு வந்த நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் வைக்கோலை கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வைக்கோலை எடுக்க முயன்றபோது இயந்திரத்தில் கை சிக்கி விபத்து ஏற்பட்டது.
உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு நாகராஜ் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல் அறுவடை இயந்திரத்தில் கை மாட்டிக் கொண்டு துடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.