ஈரோடு மாவட்டம் பவானியில், பழமை வாய்ந்த கோவிலான செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் விமர்சையாக நடைபெறும்.
இந்தாண்டு கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன், சென்ற 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி, கம்பம் நடுதல் 26ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான சாமி கருவறையில் உள்ள அம்மனுக்கு பக்தர்கள் நேரடியாகச் சென்று நீர் ஊற்றும் நிகழ்ச்சி 3ந் தேதி நடந்தது. இத்திருவிழாவில் ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அருகே ஒடும் காவிரி ஆற்றுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்தும், அவரவர் வீடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மஞ்சள், பால், தயிர், பன்னீர், ஆகியவற்றை சாமிக்கு அபிஷேகம் செய்தும் வழிபட்டனர். சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் செல்லியாண்டி அம்மன், ஊரைக் காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கை மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், குழந்தை வரம் இல்லாதவர்கள், தொழில் தொடர்ந்து பின்னடைவு ஏற்படுவதைத் தவிர்க்க, குடும்பத்தில் நோய்ப் பிரச்சினை ஏற்படாமலும், நினைத்தது நிறைவேற வேண்டும் என்றும் இக்கோவிலில் மக்கள் வேண்டுதல் வைத்து சாமிக்கு நீராட்டுதல் செய்கின்றனர்.
இக்கோவிலில், கருவறைக்குள் பக்தர்களே சென்று சாமிக்குத் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்வது தனிச் சிறப்பு. தமிழகத்தில் உள்ள கோவில்களில் பூசாரிதான் அபிஷேகம், பூஜைகள் செய்வது வழக்கம். ஆனால், பவானி செல்லியாண்டி அம்மனை திருவிழா நாளன்று பக்தர்களே கருவறையில் நுழைந்து பூஜை செய்வது, நீண்ட காலமாக நடந்து வருகிறது.