ஊர்க்காவல் படையினரை பணி நிலைப்பு செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கையும், பொது அமைதியையும் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஊர்க்காவல் படையினரின் வாழ்க்கை நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அவர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பைக்கூட அரசு செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு சீனப் போருக்கு பிறகு காவல்துறைக்கு உதவியாக பணியாற்றுவதற்காக ஊர்க்காவல்படை மறுசீரமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஊர்க்காவல்படை 1963-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. அப்போதிலிருந்து கடந்த 55 ஆண்டுகளாக காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், திருவிழாக்களின் போது பாதுகாப்புப் பணி, அஞ்சல் பணி, காவல் வாகனங்கள் ஓட்டும் பணி உள்ளிட்டவற்றை ஊர்க்காவல் படையினர் சிரத்தையுடன் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு செய்யும் பணிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தான் கொடுமை ஆகும். ஊர்க்காவல் படையினருக்கு இழைக்கப்படும் அநீதியை தமிழக அரசு களையவில்லை என்பது ஒருபுறமிருக்க, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு துணை போவதை ஏற்க முடியாது.
ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.152 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.2800 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. இதன்மூலம் ஊர்க்காவல்படை வீரர்கள் அனுபவித்து வந்த பொருளாதார நெருக்கடிகள் அகலும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்திய தமிழக அரசு, அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் பணி நாட்களின் எண்ணிக்கையை 25-லிருந்து 5 ஆக குறைந்து விட்டது. இதனால் அவர்களுக்கான தினக்கூலி 3 மடங்குக்கும் மேல் அதிகரித்தாலும் கூட மாத ஊதியம் ரூ.2800 என்ற அளவைத் தாண்டவில்லை. ஊர்க்காவல் படையினருக்கு அதிகாரப்பூர்வ பணி நாட்கள் 5 தான் என்றாலும் மாதத்தின் அனைத்து நாட்களும் பணிக்கு வரும்படி கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதனால் கைக்கெட்டிய ஊதிய உயர்வு ஊர்க்காவல்படையினருக்கு வாய்க்கு எட்டவில்லை.
ஊர்க்காவல் படையினரின் பணி என்பது ஒதுக்கித் தள்ள முடியாதது ஆகும். தமிழ்நாடு முழுவதும் 142 படை அணிகளில் 2805 பெண்கள் உட்பட மொத்தம் 15,622 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் ஊர்க்காவல் படையினர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை என்று சட்டப்பேரவையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவே பாராட்டியுள்ளார். ஊர்க்காவல் படையினரின் துணையின்றி தேர்தலோ, மீட்புப் பணிகளையோ மேற்கொள்வது சாத்தியமில்லை என்ற நிலையில், அவர்களை மாதம் முழுவதும் வேலை வாங்கி விட்டு ரூ.2800 மட்டும் ஊதியம் வழங்குவது மிகப்பெரிய உழைப்புச் சுரண்டல் ஆகும். இதை அரசாங்கமே செய்வதை அனுமதிக்க முடியாது.
கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு ரூ.18,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அதில் ஆறில் ஒரு பங்கு கூட ஊதியமாக வழங்கப்படுவதில்லை. காவல்துறையினருக்கு இணையாக அனைத்து பணிகளையும் செய்யும் ஊர்க்காவல் படையினருக்கு, காவல்துறைக்கு இணையாக ஊதியம் தராவிட்டாலும் ஓரளவு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஊர்க்காவல்படையை தமிழக காவல்துறையின் ஓர் அங்கமாக அறிவித்து, அதில் பணியாற்றும் அனைவரையும் காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு செய்ய வேண்டும். அவர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையைச் சேர்ந்தவர்கள் படிப்படியாக காவல்துறையில் சேர்க்கப்படுவதைப் போல ஊர்க்காவல்படை வீரர்களையும் குறிப்பிட்ட விகிதத்தில் காவல்துறையில் சேர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும். இது குறித்த அறிவிப்புகளை இம்மாதம் 26&ஆம் தேதி நடைபெறவுள்ள காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போது முதலமைச்சர் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.