
கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்ததாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்தது தலைமை நீதிபதி அமர்வு.
நோட்டீசில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாக, பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.-க்களும் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, உரிமைக்குழு நோட்டீசுக்கு தடைவிதித்ததுடன், வழக்கு குறித்து பேரவைச் செயலாளர், உரிமைக்குழு ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, நோட்டீசுக்கு இடைக்காலத் தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து பேரவைச் செயலாளர், உரிமைக்குழு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பேரவைச் செயலாளர் தரப்பில், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அடிப்படை தவறுகள் களையப்பட்டு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வாதிட்டார். முதல் நோட்டீசில் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வந்ததற்காக எனக் கூறிய நிலையில், இரண்டாவது நோட்டீஸில் பேரவை தலைவர் அனுமதி பெறாமல் குட்கா பொருளைக் காட்டி இடையூறு ஏற்படுத்தியதாக, நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக விளக்கம் அளிக்கபட்டது.
பேரவை உரிமைக்குழு தரப்பில் அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி, உரிமை பிரச்சினை என்பது முழுக்க முழுக்க சட்டமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டது. உரிமைக்குழு நோட்டீஸுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும், பின்னர் குழு ஆராய்ந்து சட்டமன்றத்திற்கு முடிவை அறிவிக்கும். எனவே, முகாந்திரம் இல்லாமல் விதிக்கப்பட்ட தடையை நிறுத்திவைக்க வேண்டுமென வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க மறுத்துவிட்டனர். மேல்முறையீடு மனுக்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.