நெல்லை மாநகரின் பாளை பைபாஸ் சாலையின் ஒரு ஒதுக்குப்புறமுள்ள வயல் வெளியின் ஒரு கிணற்றில் இரண்டு சாக்கு மூட்டைகளும், அடுத்த கிணற்றில் ஒரு சாக்கு மூட்டையும் கிடந்தது. பல நாட்களுக்குப் பின்பு அழுகி நாற்றமெடுத்திருக்கிறது. தகவலறிந்த பாளை மகாராஜா நகர் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அவைகளை வெளியே எடுத்தனர். மூன்று சாக்குகளிலும் 2 பெண், ஒரு ஆண் சடலம் அழுகி காணப்பட்ட நிலையிலிருந்திருக்கிறது.
போலீசார் விசாரணையில் அந்த இரண்டு பெண்களும் ரேணுகா, பவானி என்கிற திருநங்கைகள். மற்றொருவர் பெயர் முருகன். இவர்களனைவரும் பேட்டை நரசிங்க நல்லூரில் வசிப்பவர்கள். இந்த பகுதியில் திருநங்கையான ரேணுகாவுக்கு சேலத்தை சேர்ந்த ரிஷிகேஷ் என்பவர் டிக்டாக் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். ஏற்கனவே டிக்டாக் மோகம் கொண்ட ரேணுகா அவன்மீது காதலாக நெல்லை வந்த ரிஷிகேஷ் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரேணுகாவை திருமணம் செய்திருக்கிறார். அதன்பின் ரேணுகாவின் தோழியான அனுஷ்காவுடன் ரிஷிகேஷ் கள்ள தொடர்பு வைத்தது மனைவி ரேணுகாவிற்கு தெரியவர அவர்ளுக்குள் சண்டை மூண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் இவர்களின் நண்பரான முருகன் என்பவரிடம் அவருக்கு குழந்தை வாங்கி தருவதாக 5 லட்சம் வாங்கி இருக்கிறார் ரிஷிகேஷ். வாக்குப்படி குழந்தை கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார் ரிஷிகேஷ். இதை அறிந்த ரிஷிகேஷின் கள்ள காதலி அனுஷ்கா அவனிடம் ஒரு தொகை கேட்டு மிரட்ட, தன் நண்பர்களான செல்லத்துரை ஸ்னோவிட் இருவரையும் வர வழைத்து, அவர்களுடன் சேர்ந்து அனுஷ்காவை கொலை செய்து ஒரு சாக்கு மூட்டையில் அடைத்து கிணற்றில் வீசி இருக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் தான் வாங்கிய பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்த முருகனையும் கொலை செய்து சாக்கு மூட்டையில் அடைத்து அதே கிணற்றில் வீசியுள்ளனர்.
இந்த நிலையில் தனது கணவன் முருகனை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்த பவானியை கொலை செய்து அதே பாணியில் கிணற்றில் வீசியுள்ளனர். அவைகளை போலீசார் வெளியே எடுத்து உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி உள்ளனர். டிக்டாக் மோகத்தால் மூன்று கொலைகள் நடந்துள்ளன. ரிஷிகேஷ், செல்லத்துரை, ஸ்னோவிட் மூவரையும் கைது செய்திருக்கிறோம் என்றார் டி.சி. யான சரவணன்.