சாப்ட்வேர் என்ஜினீயருக்கும், அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென்று மணப்பெண் திருமணத்திற்கு முந்தைய நாள் அமெரிக்காவிற்கு சென்றதால் திருமணம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் தினேஷ். இவருக்கு அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் மித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்தை திருப்பதியில் வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் திருமண செலவு முழுவதையும் மணமகன் தினேஷ் வீட்டார் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து திருப்பதியில் மண்டபம், விருந்தினர்கள் தங்குவதற்காக அறைகள் மற்றும் சாப்பாட்டு செலவு என அனைத்தும் மணமகன் வீட்டார் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் திடீரென மணமகள் அமெரிக்காவுக்கு பறந்து சென்று விட்டார். இதனால் பதறிப்போன மணமகன் வீட்டார் பெண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது மாப்பிள்ளை தினேஷிடம் பேசிய மணப்பெண் மித்ரா, உங்களுடைய மூக்கு பெரிய அளவில் இருப்பதாக என்னுடைய தோழி எல்லாரும் கிண்டல் செய்கின்றார்கள். அதனால் எனக்கு உங்களை திருமணம் செய்ய பிடிக்கவில்லை அதனால் அமெரிக்காவிற்கு திரும்பி வந்துவிட்டேன் என்று போனில் தெரிவித்துள்ளார். மேலும் திருமணத்தை நிறுத்தி விடுங்கள் என்றும் மித்ரா கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகன் தினேஷ் உங்களுக்காக திருமணத்திற்குப் பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சரி செய்து கொள்கிறேன் என்று மித்ராவிடம் சமாதானம் செய்துள்ளார். ஆனால் மணமகன் தினேஷ் எவ்வளவோ சமாதானம் செய்தும் திருமணத்திற்கு விருப்பம் இல்லை நிறுத்தி விடுங்கள் என்று மித்ரா கூறிவிட்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு திருமணம் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு தாங்கள் செலவு செய்த பணத்தில் பாதியளவு திருப்பி கொடுங்கள் என்று மணப்பெண் வீட்டாரிடம் மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். அதற்கு செலவு செய்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்று மித்ரா வீட்டார் தெரிவித்துள்ளனர். பின்பு தினேஷ் வீட்டார்கள் மணமகள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது போலீஸ் புகார் அளித்து உள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.