அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதே சமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், ''அமலாக்கத்துறை உங்களை கைது செய்கிறோம் என்று சொல்லும் வரை அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்த செந்தில் பாலாஜி, கைது என்று சொன்னவுடன் திடீரென்று தனக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது என உருண்டு புரண்டு நடித்த காட்சிகள் எல்லாவற்றையும் பார்த்தோம். பொதுவாக 40 வயது 45 வயதுக்கு மேல் போனாலே அனைவருக்கும் இதயத்தில் அடைப்புகள் இருக்கும். அது எத்தனை சதவிகிதம் என்பதை பொறுத்துதான் சிகிச்சை. 10 சதவீதம் 20 சதவீதம் என்றால் சிகிச்சை தேவையில்லை. 60 சதவீதம் 70 சதவீதம் அடைப்பு இருந்தால் தான் சிகிச்சை தேவை. 90 சதவீதம் செந்தில் பாலாஜிக்கு அடைப்பு இருக்கிறது என்று சொன்னார்கள்.
நம்ம வீட்டில் யாருக்காவது மாரடைப்பு வந்துவிட்டால் அய்யய்யோ உடனே ஆபரேஷன் செய்யணும் காசு இல்லை என்றால் கூட பரவாயில்லை அப்புறம் கொடு என உடனே அறுத்து ஆபரேஷன் பண்ணுகிறார்களா இல்லையா? ஆனால் செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு வந்து 14, 15, 16, 17, 18, 19, 20, 21 ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்று எட்டாவது நாள். எட்டு நாள் மூன்று இடத்தில் 90% அடைப்பு வந்தும் உலகத்தில் உயிரோடு இருக்கிற ஒரு அதிசய மனிதர் யார் என்றால் செந்தில் பாலாஜி மட்டும் தான். அவரை காப்பாற்றுகின்ற மருத்துவர்கள் நம்ம தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்'' என்றார்.