ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, அந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் 7 பேர் விடுதலை தீர்மானம் தொடர்பாக இதுவரை ஆளுநர் முடிவெடுக்கவில்லை.
இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து தன்னை சட்டவிரோதமாக சிறையில் வைத்துள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்யவில்லை. விடுதலை செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் 7 பேரையும் சட்டவிரோதமாக சிறையில் வைத்துள்ளதால் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான், ஆளுநர் கையெழுத்துகூட தேவையில்லை என நளினி தரப்பு வாதிட்டது.
இந்நிலையில் அரசு தரப்பில், ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது பரிந்துரை மட்டுமே. 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவாக பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என பதிலளித்து வாதிடப்பட்டது. இதனையடுத்து நளினி சட்டவிரோதமாக சிறையில் இருக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை பிப்.18 ஆம் தேதி ஒத்திவைத்தது.