சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பாடங்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், பி. செந்தில்குமார் எழுதிய பாஞ்சலங்குறிச்சி போர்கள் (The Battles of Panchalankuruchi) என்ற நூல் வெளியிட்டு விழா இன்று (12.11.2024) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, ‘நமது சுதந்திரப் போராட்டச் சுடரைப் பற்றவைத்த அலாதியான தைரியம் மற்றும் உச்சபட்ச தியாகங்களின் சொல்லப்படாத கதைகளின் அவிழ்ப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பாடங்களில் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த பாடங்கள் இல்லை. திராவிடம் குறித்த வரலாறுகள் தான் அதிகம் உள்ளன.
19ஆம் நூற்றாண்டு பாடப் புத்தகங்களில் ஆங்கிலேயர் குறித்த தகவல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் கல்வி முறையைச் சீரழித்து விட்டனர். தமிழக அரசிடம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த பட்டியலைக் கேட்டபோது 30 பேர்களைக் கொண்ட பட்டியலை அனுப்பினர். நாகாலாந்தில் 100 முதல் 1000 சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பார்க்கலாம். எனவே இந்த எண்ணிக்கை தமிழகத்தில் எப்படி மிகவும் குறைவாக இருக்கும். திராவிட வரலாறு, பிற விஷயங்களைப் பேசி சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சிந்திக்க மறந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.