சென்னை கிண்டியில் கலைஞர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர், மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியால் குத்திய நபர் யார்? எதற்காக குத்தினார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “வட இந்தியர்கள் யாரோ நான்கு பேர் சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்கு வந்து மருத்துவரை அறைக்குள் பூட்டி கத்தியால் குத்தியுள்ளனர் என்பது தெரிகிறது. இந்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.