![Government contractors Petition to take action !!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wf8jsxj60YAyxaWcI-mVb2j1gWUTMRkWlzgKK9Uu4WE/1619513948/sites/default/files/inline-images/th-1_1034.jpg)
தேனி மாவட்ட யூனியன் அரசு ஒப்பந்தக்காரர்கள், திட்ட அலுவல உதவி செயற்பொறியாளர் மற்றும் ஜீப் ஓட்டுநர் மீது சரமாரியான குற்றச்சாட்டை தெரிவித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்ட திட்ட இயக்குநரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்தப் புகார் மனு குறித்து அரசு ஒப்பந்தக்காரர்கள் நலச் சங்கம் சார்பில் கூறியிருப்பதாவது, “தேனி மாவட்ட யூனியனில் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பணி செய்யும் இடங்களை உதவி செயற்பொறியாளர் அனிதா பார்வையிட்ட பின்பு வேலைகளைத் தொடங்குகிறோம். அதன் பின் செயற்பொறியாளர் பார்வையிட கால தாமதம் செய்கிறார். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
மேலும், இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதால் பொதுமக்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையே தேவையற்ற பிரச்சினை ஏற்படுகிறது. உதவி செயற்பொறியாளரை நேரடியாக தொடர்புகொண்டால், உங்கள் யூனியன் உதவி பொறியாளரைப் பேச சொல்லுங்கள் என்று உதாசீதனப்படுத்துகிறார். மேலும் ஒவ்வொருமுறை வேலைகளைப் பார்வையிட வரும்போதும், ஒட்டுநர் கையூட்டு கேட்டு மிரட்டுகிறார். ஆகையால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பணிகளுக்கு எப்.எம்.பி. போட்டோவிற்கு அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், தற்போது கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் அடைந்துகொண்டே செல்கிறது. அரசு நிர்ணயிக்கும் விலையைவிட வெளி மார்க்கெட்டில் கூடுதலான விலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை மூலம் பொருட்கள் வழங்க வேண்டும். டெண்டர் எடுப்பதற்கு மதிப்பீடு செய்ய, இடத்தைப் பார்வையிட்ட பின்பு மதிப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளையும் வலியுறுத்தி தேனி மாவட்ட திட்ட அலுவலர் மணி மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு பெரியகுளம், ஆண்டிப்பட்டி, தேனி, மயிலாடும்பாறை யூனியன் அரசு ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனுவாக கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.