சேலத்தில், திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த பெண் ஒப்பந்த ஊழியரை அதிரடியாக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் திலகவதி. தலைவாசலில் வேளாண்மைதுறை உதவி தொழில்நுட்ப மேலாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஏற்காடு (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். மார்ச் 4ம் தேதி நடந்த வேட்பாளர் நேர்காணலிலும் கலந்துகொண்டார். இதை சிலர் வீடியோவில் பதிவுசெய்து சேலம் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராமனுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களிலும் பரவியது.
அரசுத்துறையில் நிரந்தர அல்லது ஒப்பந்த ஊழியராக உள்ளவர்கள் பணிக்காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாளராகவோ, தேர்தலில் போட்டியிடுவதோ கூடாது என்பது நடத்தை விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முன்கூட்டியே பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடலாம். இதையடுத்து, திலகவதியை பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ராமன் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதுகுறித்து திலகவதி கூறுகையில், ''நான் மருத்துவ விடுப்பில் இருந்து வருகிறேன். ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்ததன் பேரில், கடந்த 4ம் தேதி நேர்காணலிலும் கலந்துகொண்டேன். ஆனால், மார்ச் 1ம் தேதியே என்னை பணிநீக்கம் செய்ததாக உத்தரவிட்டுள்ளனர்.
என் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அதுகுறித்து நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்டிருக்கலாம். ஆனால் அப்படியான நடவடிக்கைகள் ஏதுமின்றி திடீரென்று பணிநீக்கம் செய்துள்ளளதாக உத்தரவு வந்தது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளித்தால் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும். விருப்ப மனு கொடுத்ததற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது முரணாக உள்ளது. எனக்குத் தெரிந்து சில அரசு ஊழியர்களும் கூட தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், நான் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்ததாலேயே பாரபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளனர்,'' என்றார்.