பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று, 6ஆம் தேதி அக்கட்சியின் தமிழக தலைவரான எல்.முருகன் தலைமையில், 'வேல் யாத்திரை' திருத்தணியில் தொடங்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. தடையை மீறியதால், திருத்தணியில் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் உட்பட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், பல ஊர்களில் உள்ள பா.ஜ.க.வினர் வேல் யாத்திரை தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே, மாவட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஏ.டி.எஸ்.பி மல்லிகா, டவுன் டி.எஸ்.பி. ராஜு ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் நோக்கி பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயன்றதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போலீசார் அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் எனக் கூறியும் பா.ஜ.க.வினர் கேட்கவில்லை. அடுத்த நடவடிக்கையாக பா.ஜ.கவினரை போலீசார் கைது செய்யத் தொடங்கினார்கள். பா.ஜ.க.நிர்வாகிகள் பலரும் கைதாகாமல் அந்த இடத்தை விட்டு விலகிப் போய்விட்டனர். எஞ்சிய 50-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர் போலீசார்.