கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் கைதாகி நீதிமன்றத்தினால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு கடந்த ஆண்டு விடுதலை செய்திருந்தது. அதாவது கோத்ரா வழக்கு தொடர்பாக குஜராத் அரசு அமைத்த சிறப்புக் குழுவின் பரிந்துரையின்படி நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகக் கூறி குஜராத் அரசாங்கம் அவர்களைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக, அவர்கள் விடுதலையின்போது சிறை வாசலிலேயே மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தது சர்ச்சையாகி மேலும் பல விவாதங்களைக் கிளப்பி இருந்தது. அதே சமயம் இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், நாகரத்தினா அமர்வு முன்பு நேற்று (08-01-24) விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருவதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது. மேலும் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையை காப்பது மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.
தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை - நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது. ‘நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்’ என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.
நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.