சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் தீயணைப்பு வீரர்களுடன் தானும் இணைந்து, தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே. டி.ராஜேந்திரபாலாஜி கிருமி நாசினி தெளித்தார்.
கரோனா வைரைஸை கட்டுப்படுத்துவதற்காக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று, தனது தொகுதியிலுள்ள சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு செய்தார். திருத்தங்கல் நகராட்சி நிர்வாகம், சிவகாசி நகராட்சி நிர்வாகம், தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சகிதமாக இன்று களமிறங்கி, தானே கிருமிநாசினி தெளித்தார். பொதுமக்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கினார்.
சிறிய இடைவெளிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி,
“நாட்டில் இதுபோன்று இதற்கு முன்னர் வந்ததில்லை. இதன் பாதிப்பினை மக்கள் இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வருகிறார்கள். பிரதமரும், முதல்வரும் பொதுமக்களிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளனர். உங்களைக் காப்பாற்றிக் கொள்ள தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இதுதான் உங்கள் குடும்பத்தினருக்கும், நாட்டிற்கும் செய்யும் சேவை என வலியுறுத்துகின்றனர். சுகாதாரத் துறையினர் தீவிரமாகப் பணி செய்கின்றனர். கிராமப் பகுதியை கரோனா தாக்காது என நினைக்கின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. மக்கள் தங்களுக்குள்ளாகவே தனிமைப்படுத்தி கொள்கின்றனர். ராஜபாளையத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா தாக்கியுள்ளது. அவர் மதுரையைச் சேர்ந்தவர்தான். ராணுவத்தினர் இங்கு வரவில்லை. மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வல்லரசு நாடுகளே அச்சத்தில் உள்ளன. நமது பிரதமர், கரம் கூப்பி மன்னிப்பு கேட்கிறார். முதல்வர் தினசரி நிகழ்வுகளைக் கேட்டறிகிறார். அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, மக்களுக்கு சிரமமில்லாமல் பார்த்துக் கொள்கிறார். தற்சமயம் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. விலை ஏற்றம் இல்லை. மற்ற நாட்களில் இருந்த அதே விலையில்தான் பொருட்கள் விற்கப்படுகிறது. ஆவின் விற்பனையில் எந்த குறையும் இல்லை. பாலகங்களில் 24 மணி நேரமும் மக்கள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.” என்றார்.