
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய விஜய், “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்கமாட்டார்களாம். எல்கேஜி, யூகேஜி பசங்க சண்டை போடுவார்கள் இல்லையா, அதுபோல் இந்த விஷயத்தில் நடந்துகொள்கிறார்கள். நிதியைக் கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை. ஆனால் இவர்கள் இருவரும், அதுதான் நமது பாசிசமும், பாயாசமும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்வார்களாம், அதை நாங்கள் நம்ப வேண்டுமாம். வாட் ப்ரோ.. இட்ஸ் ராங் ப்ரோ..(What Bro.. It’s very Wrong Bro) யார் சார் நீங்கள்? எல்லாம் எங்கே இருக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பது மக்களுக்கு நனறாக தெரியும்” என்று மறைமுகமாக திமுகவையும் பாஜகவையும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் கருணாஸ், “பாசிசத்திற்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம் ஒன்று இப்போது பேசுகிறது. பாதரசம் எதிலும் ஒட்டாதது; எப்போதும் மக்களுடன் ஒட்டப்போகிறதும் கிடையாது. நஞ்சு கக்கக்கூடிய கொடிய திரவம் இந்த பாதரசம். தங்கத்தை உருக்கும்; உருக்குலைக்கும். நல்லா இருக்கும் நாட்டை உருக்குலைக்கின்ற இதுபோன்ற பாதரசத்தை, பாசிசங்கள் தான் உருவாக்குகின்றது. அந்த பாசிசங்கள் தான் இதுபோன்ற பாதரசத்திற்கு பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதை நீங்கள் அனைவரும் உணரவேண்டும். ஆகவே எத்தனை சவால்களை மத்திய அரசு செய்தாலும், மக்களின் நலத்திட்டங்கள் மீது நம்பிக்கை கொண்ட முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தையும், தமிழக மக்களை நல்ல விதமாக வழிநடத்திச் செல்வார் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.