
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், குளமங்கலம், பாண்டிக்குடி, நெய்வத்தளி, பெரியாளூர், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், அணவயல், மாங்காடு, வடகாடு மற்றும் சம்மட்டிவிடுதி, அரசடிப்படி, ராயப்பட்டி, திருவரங்குளம், வம்பன் உள்பட சுமார் 100 கிராமங்களில் மலர்கள் உற்பத்தியே பிரதான விவசாயமாக உள்ளது.
இந்தப் பகுதியில் மல்லிகை, கனகாம்பரம், முல்லை, காட்டுமல்லி, ரோஜா, அரளி, சம்பங்கி, செண்டி, பிச்சி உள்ளிட்ட அனைத்து வகை மலர்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்கள் கீரமங்கலத்தில் உள்ள கமிசன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கீரமங்கலம் மலர் கமிசன் கடைகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை மலர்கள் விற்பனைக்காக வருகிறது. இந்த மலர்களை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
சுப நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக்கள் இல்லாததால் மலர்கள் விற்பனை மந்த மடைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் விற்பனையாகாத மலர்கள் குப்பையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல விவசாயிகள் உற்பத்தி செய்து கமிசன் கடைகளுக்கு கொண்டு வரும் மலர்களின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில மாதங்களில் ஒரு சில சுபமுகூர்த்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் பூக்கள் விலை குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் விலை குறைவானாலும் விற்பனை செய்ய முடியாமல் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக செண்டி பூக்கள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டு குப்பை வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டு ரக பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது இது போல தேக்கமடைவதில்லை. ஆனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சில வியாபாரிகள் மரபணு மாற்றப்பட்ட பூ செடிகளை வாங்கி விவசாயிகளுக்கு கொடுத்ததால் உற்பத்தி அதிகரித்தது. இதே போல ஏராளமான விவசாயிகளும் மரபணு மாற்ற பூ செடிகளுக்கு மாறியதால் நாட்டு ரக பூக்கள் உற்பத்தியும் குறைந்து படிப்படியாக விதைகளும் குறைந்துவிட்டது. இதே போல மரபணு மாற்றப்பட்ட பூ செடிகள் வந்ததால் முகூர்த்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் பூக்கள் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர்.