![Government bus impounded for non-payment compensation accident case](http://image.nakkheeran.in/cdn/farfuture/gt3w9eN1EvR1reetoqAPjigzL0UHhgb97cNstBdj8eA/1668511753/sites/default/files/inline-images/997_58.jpg)
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த ஊ.கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து. இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு மாட்டு வண்டியில் சென்றபோது அரசக்குழி அருகே அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அச்சம்பவத்தில் பச்சமுத்துக்கு சொந்தமான 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதுகுறித்து 2017 ஆம் ஆண்டு, விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கு முடிவில் பாதிக்கப்பட்ட பச்சமுத்துக்கு ரூ 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என திருச்சி கோட்ட அரசுப் பணிமனை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்ட பச்சமுத்துவிற்கு விபத்திற்கான இழப்பீட்டை அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர் சார்பாக நீதிமன்றத்தில் ‘நிறைவேற்று’ மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி திருச்சி கோட்ட பணிமனை பேருந்தினை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த திருச்சி கோட்ட பேருந்து ஒன்று வேப்பூர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது அந்தப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதனால் பேருந்தில் பயணித்த 27 பயணிகள் இறக்கி விடப்பட்டு, மாற்றுப் பேருந்தில் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.
திருச்சியிலிருந்து பயணிகளுடன் சென்னை சென்ற அரசுப் பேருந்தை , நடு வழியில் நிறுத்தி ஜப்தி செய்ததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். தனி மனிதர்களின் வாகனங்களுக்குக் காப்பீடு செய்ய அறிவுறுத்தும் அரசு, அரசுப் பேருந்துகளுக்குக் காப்பீடு செய்வதில்லை. இதனால் இதுபோன்று விபத்துகள் நடைபெறும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் இழப்பீடு வழங்க முடியாமல் சிக்கல் ஏற்படுகிறது எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.