கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த அவருடைய தோழி சுவாதிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 22) திடீரென்று நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. இவர் 23.6.2015ம் தேதி, நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில்தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கொண்ட கும்பல்தான் அவரை கொலை செய்ததாக, திருச்செங்கோடு போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கில், கோகுல்ராஜின் நெருங்கிய தோழியான நாமக்கல் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியை, அரசுத்தரப்பில் முக்கிய சாட்சியாக சிபிசிஐடி போலீசார் சேர்த்து இருந்தனர். ஆனால் அவர் பிறழ் சாட்சியாக மாறினார். இதையடுத்து, பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிசிஐடி போலீசார், நாமக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில், 1.10.2018ம் தேதி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு முதன்முதலாக கடந்த பிப்ரவரி 11, 2019ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டும் அன்றைய தினம் சுவாதி ஆஜராகவில்லை. அதன்பிறகு, மீண்டும் கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோதும் சுவாதி நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும், மார்ச் 12ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் முதலாவது நீதித்துறை நடுவர் வடிவேல் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், நாமக்கல் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிமன்ற நடுவர் ஜெயந்தி முன்னிலையில், பிப்ரவரி 22, 2019ம் தேதி திடீரென்று சுவாதி ஆஜரானார். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து அவர் மீதான பிடிவாரண்டை ரத்து செய்து, வரும் மார்ச் 12ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டார்.