Skip to main content

மயிலாடுதுறை தொகுதி ஜி.கே. வாசனுக்கு என்றால், சிட்டிங் அதிமுக பாரதிமோகனுக்கு?

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

 

ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணைந்து, மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடப்போவதாக அவரது ஆதரவாளர்கள் குதூகளித்து வருகின்றனர்.

 

v

 

நாடாளுமன்றத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைப்பது, தொகுதிகள் பங்கீடு என ஜரூராக இருந்துவருகின்றனர். தேர்தலுக்கான தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியிலும் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களும் பெற்றுவருகின்றனர். 

 

 டெல்டா மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில்  அதிமுகவிடமும், திமுகவிடமும் மாறி மாறி கூட்டணி பேசி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடைசி நேரம் வரை இரு அணிகளிலும் இடம்கிடைக்காமல் போக இறுதியில் மக்கள் நலக் கூட்டமைப்பில் சேர்ந்தார் வாசன். தற்போது  மக்கள் நல கூட்டு இயக்கத்தில் உள்ள இடது சாரிகள், மதிமுக, விசிக போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.  அதேபோல் தேமுதிகவையும் அதிமுக தங்களது கூட்டணியில் எழுக பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாமகவும் அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது.

 

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கூட்டணிப்பேசியது போலவே, தமாக சார்பில் திமுகவிடமும், அதிமுகவிடமும் பேச்சு நடத்திவருகிறது.

 

இது குறித்து கும்பகோணத்தை சேர்ந்தவரும் வாசன் குடும்பத்தோடு நெருக்கமான ஒருவரிடம் விசாரித்தோம், " தலைவர் வாசனுக்கு திமுகவில் சேர வேண்டும், அந்த கூட்டணியில் இடம் பிடிக்க வேண்டும் , என்பதுதான் இன்று வரை விருப்பம். அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடக்கிறது. அதேபோல் வாசனுக்கு உரிய மரியாதையை அளிக்க ஸ்டாலினும்  முன்வந்திருந்தார். ஆனால் ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம்பிடித்து காத்திருக்கும் காங்கிரஸ்காரர்கள் வாசனை இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

 

கடந்த சட்டமன்ற தேர்தல் போல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக  அதிமுகவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அவர்களிடம் இரண்டு மக்களவையும் ஒரு மாநிலங்களவையும் கேட்டுள்ளோம்.  அவர்களும் எங்களோட நிலையை சாதகமாக்கிக்கொண்டு நம்ம அணியில் கூட்டணிக்கட்சிகள் நிறைய இருப்பதாக கூறி ஒரு தகுதி தருகிறோம்.  அது உங்கள் விருப்பப்படி எந்த தொகுதி கேட்டாளும் தருகிறோம் என்று கூறிவிட்டனர். தலைவர் எங்களிடம் ஆலோசித்தார். வாசன் மயிலாடுதுறை தொகுதியில் நிற்கலாம் என யோசித்திருந்தார்.  சொந்த தொகுதி என்பதால் அதையே கேட்பார்.  நிச்சயம் கிடைத்துவிடும்.  மயிலாடுதுறையில் போட்டியிடுவது உறுதி". என்றார் அவர்.

 

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக எம்பியான பாரதிமோகனின் நிலைமை என்ன என்பதை விசாரித்தோம்," நவக்கிரகத்தில் ஒன்றான சுக்கிரன் தலமான கஞ்சனூர் கிராமத்தில், அடுத்த கிராமத்திற்கே தெரியாத சாதாரண விவசாயியாக இருந்த பாரதிமோகனுக்கு பதவிகள் மட்டுமல்ல, பணமும் தானாகவே குவிந்துவிட்டன. அற்பனுக்கு வாழ்வு வந்தது போலவே பாரதிமோகனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தபடியே இருந்தது. அத்தனையும் வைத்தியலிங்கம் மூலம் ஜெயலலிதாவால் கிடைத்தது. யாரும் எதிர்பார்த்திடாத நிலையில் திருவிடைமருதூர், எம்.எல்.ஏ.  பிறகு எம்.பி. என மாறி மாறி பதவிகளும் அதன்மூலம்  வசதியையும் கூட்டிக்கொண்டார். 

 

கட்சிக்காரனுக்கோ, பொதுமக்களுக்கோ,  எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் அவர் செய்து கொடுத்ததில்லை. இது அவருக்கே தெரிந்து இந்த முறை நான் போட்டியிடப் போவதில்லை,  என திருப்பனந்தாள் பகுதியில் உள்ள தனது ஆதரவாளர்களிடம் சமீப காலமாக கூறிவந்தார். கட்சித்தலைமை போட்டியிட சொன்னால் மட்டுமே போட்டியிடுவேனே தவிர நான் அழுத்தமாக கேட்கமாட்டேன். மீண்டும் போட்டியிட்டால் பணமும் போயிடும், பதவியும், மறியாதையும் போயிடும் என கிசுகிசுத்து வந்தார்.

 

 இந்தமுறை கூட்டணி கட்சிக்கு தொகுதி என்று கட்சி தலைமை கூறிவிட்டால்,  "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது" என்பது போல சைலண்டாகி,  நிமிர்ந்து வருவார். மீண்டும் சீட்டு கொடுத்துவிட்டால் கடந்த முறை வெற்றிபெற்று நன்றி சொல்லவே போகலையே,  எப்படி ஒட்டு கேட்கபோவது என நெலியத்துவங்கிடுவார்". என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்