திருச்சி மாநகரம் திருவானைக்காவல் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் நேருஜி நடுநிலைப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உயர்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பில்சியான லூர்துமேரி தலைமையில் இன்று (12ம் தேதி) நடைபெற்றது.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமாரி வரவேற்புரை ஆற்றினார். குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைப்பது, குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006ன் படி தண்டனைக்குரிய குற்றம், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும், வேலைக்கு அமர்த்துவதும் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும், குழந்தைகளை பள்ளிக்கு தொடர்ந்து அனுப்பவேண்டும். பள்ளி இடைநிறுத்தம் இருந்தால் அந்த குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதில் அனைவரின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினார். பெண் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி குழந்தைகள் மத்தியில் குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஐ.டி.எப்.சி ஃபர்ஸ்ட் பாரத் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் சிவா, மேலாளர் சந்துரு ஆகியோர் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சமுதாயத்தின் பங்கு குறித்தும் கல்வியின் அவசியம் குறித்தும் பேசினார். மாநகர காவல் துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் வசந்தா, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தலைமை காவலர் லட்சுமி ஆகியோர் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை கடத்தல், பெண் சிசுக்கொலை குறித்து பேசினார்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.