Skip to main content

கோகுல்ராஜ் ஆணவக்கொலை:முக்கிய சாட்சி தடாலடி பல்டி! சட்டப்புத்தகத்தை புரட்டிய நீதிபதி!!

Published on 31/10/2018 | Edited on 31/10/2018

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முக்கிய சாட்சியான கவுரிசங்கர் தடாலடியாக பிறழ் சாட்சியம் அளித்ததால் அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிபிசிஐடி போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

 


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ் (23) கடந்த 24.6.2018ம் தேதியன்று மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 

 

murder

 

கல்லூரியில் தன்னுடன் ஒரே வகுப்பில் படித்து வந்த, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதியும், கோகுல்ராஜூம் காதலித்து வருவதாகக் கருதிய ஒரு கும்பல் அவரை கொலை செய்திருக்கலாம் என தகவல்கள் உலா வந்தன. 


கோகுல்ராஜ், பட்டியல் சமூகத்து இளைஞர் என்பதாலும், சுவாதி கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அப்போது கருத்துகள் தெரிவித்தனர்.

 


கோகுல்ராஜை கொலை செய்ததாக, சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண் உள்ளிட்ட 17 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 


வழக்கு நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் கைதானவர்களில் ஜோதிமணி என்ற பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாகிவிட்டார். கடந்த 30.8.2018ம் தேதி முதல் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச். இளவ-ழகன் முன்னிலையில் நடந்து வருகிறது.

 

murder

 

யுவராஜ் வகையறா தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஜிகே என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூவும், அரசுத்தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோரும் ஆஜராகி வாதாடி வருகின்றனர்.


இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 30, 2018) நடந்த சாட்சிகள் விசாரணையின்போது முக்கிய சாட்சிகளில் சிலர் திடீரென்று பிறழ் சாட்சியம் அளித்தனர்.


சாட்சிகள் விசாரணை பகல் 12.15 மணியளவில் தொடங்கியது. அரசுத்தரப்பு 23வது சாட்சியான கார் புரோக்கர் செல்வி என்கிற செல்வரத்தினம், கோகுல்ராஜை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டாடா சபாரி காரின் முன்னாள் உரிமையாளர் ரமேஷ்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன், ஓமலூரை சேர்ந்த ஜவுளிக்கடைக்காரர் சீனிவாசன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் காருக்கு போலி பதிவெண் ஸ்டிக்கர் ஒட்டியதாக சொல்லப்படும் கவுரிசங்கர்;

 

murder


இளம்பிள்ளையைச் சேர்ந்த காபி பார் மற்றும் பெட்டிக் கடைக்காரர் குமார், மஞ்சக்கல்பட்டியைச் சேர்ந்த செல்போன் கடைக்காரர் தினேஷ்குமார், கோகுல்ராஜ் படித்து வந்த கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் டீக்கடை வைத்திருக்கும் பாலகிருஷ்ணன், ஸ்டிக்கர் கடைக்காரர் ரமேஷ், தேவூர் போலீஸ் நிலைய எஸ்எஸ்ஐ பாஷ்யம் ஆகிய 10 பேர் சாட்சியம் அளித்தனர்.

 


அரசுத்தரப்பில் சாட்சியம் அளிக்க அழைப்பாணை அனுப்பப்பட்டதன்பேரில் நீதிமன்றத்திற்கு வந்திருந்த செந்தில், மாலதி ஆகிய இருவரும் சாட்சியம் அளிக்காமலேயே சொல்லாமல் கொள்ளாமல் பாதியிலேயே ஓடிவிட்டனர். 


அரசுத்தரப்பு சாட்சிகளில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட சங்ககிரியைச் சேர்ந்த கவுரிசங்கர், சங்ககிரியில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான 'ரமேஷ் ஸ்டிக்கர்ஸ்' கடையில் வேலை செய்து வருகிறார். கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் நாளில் இருந்து ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தே அந்தக் கடையில் பணியாற்றி வருவதாகக் கூறினார்.

 


சிஆர்பிசி சட்டப்பிரிவு 164ன்படி, ஏற்கனவே நாமக்கல் ஜேஎம்&2 நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக கவுரிசங்கர் வாக்குமூலம் அளித்திருந்தார். அதற்கு மாறாக செவ்வாக்கிழமையன்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியம் அளித்தார். 


நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்ட கேள்விகளும், கவுரிசங்கர் அளித்த பதில்களும்...


வழக்கறிஞர்: இங்கே குற்றவாளிகள் கூண்டில் நிற்பவர்களில் யாரையாவது தெரியுமா?

கவுரிசங்கர்: தெரியாது

வழக்கறிஞர்: இந்த வழக்கை பற்றி ஏதாவது தெரியுமா?

கவுரிசங்கர்: தெரியாது

வழக்கறிஞர்: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் உங்களிடம் விசாரித்தார்களா? 

கவுரிசங்கர்: ஆமாம்

வழக்கறிஞர்: இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஏதாவது வாக்குமூலம் அளித்தீர்களா?

கவுரிசங்கர்: ஆமாம்

வழக்கறிஞர்: கோகுல்ராஜ் வழக்கு தொடர்பானதா?

கவுரிசங்கர்: ஆமாம்

வழக்கறிஞர்: நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தபிறகு அதில் கையெழுத்து போட்டீர்களா?

கவுரிசங்கர்: ஆமாம்


(அப்போது, சிஆர்பிசி 164 வாக்குமூலத்தில் கவுரிசங்கர் கையெழுத்து போட்டிருப்பதை சாட்சி குறியீடு செய்யும்படி அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் முறையிட்டார். அதற்கு யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜிகே, சட்டப்படி அவ்வாறு கையெழுத்தை குறியீடு செய்ய முடியாது என்று ஆட்சேபித்தார். 

 


அதற்கு அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 80ன்படி, கையெழுத்தை குறியீடு செய்யலாம் என்றார். நீதிபதி கே.ஹெச். இளவழகன், தனக்கு சந்தேகம் இருப்பதாகக்கூறி, உடனடியாக மேஜையில் வைக்கப்பட்டிருந்த சாட்சிய சட்டம் குறித்த புத்தகத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர், சிஆர்பிசி 164 வாக்குமூலத்தில் உள்ள கையெழுத்தை குறியீடு செய்ய முடியாது என கூறினார். இதனால் விசாரணை மன்றம் ஐந்து நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது மணி மாலை 3.40).

 

murder

 

வழக்கறிஞர்: 23.6.2015ம் தேதியன்று இரவு 8 மணியளவில், 1வது எதிரி யுவராஜ் நீங்கள் வேலை பார்க்கும் ஸ்டிக்கர் கடைக்கு எம்எம் 540 என்ற பதிவெண் கொண்ட ஒரு காரை ஓட்டி வந்தாரா?

கவுரிசங்கர்: எனக்கு ஞாபகம் இல்லை

 

வழக்கறிஞர்: காரின் ஆர்சி புத்தகத்தை மறதியாக அலுவலகத்திலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன் என்று சொல்லி, அந்த காருக்கு டிஎன் 30 ஏஎஸ் 6169 என்ற பதிவெண் ஸ்டிக்கரை ஒட்டும்படி சொன்னாரா? 

 

கவுரிசங்கர்: ஆர்சி புக் இல்லாவிட்டால் நாங்கள் பதிவெண் ஸ்டிக்கர் ஒட்டமாட்டோம்

வழக்கறிஞர்: யுவராஜ் சொன்தன்பேரில் அந்த பதிவெண்ணை நீங்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்து, அதை ஸ்டிக்கராக ஒட்டியதாக போலீசாரிடம் முன்பு வாக்குமூலம் அளித்திருக்கிறீர்கள்?

 

கவுரிசங்கர்: நான் அப்படி சொல்லவில்லை

வழக்கறிஞர்: நீங்கள் ஒட்டிய ஸ்டிக்கர் இதுதானே? (அப்போது அரசுத்தரப்பு வழக்கறிஞர் கவுரிசங்கரிடம் பதிவெண் அச்சிட்ட, கசங்கிய நிலையில் இருந்த ஒரு ஸ்டிக்கரை காண்பித்தார்)

 

கவுரிசங்கர்: ஞாபகம் இல்லை

வழக்கறிஞர்: ஸ்டிக்கர் ஒட்டிக்கொடுத்ததற்காக நீங்கள் யுவராஜிடம் 180 ரூபாய் சார்ஜ் செய்தீர்கள்?

கவுரிசங்கர்: ஞாபகம் இல்லை

வழக்கறிஞர்: அதற்கு யுவராஜ், 500 ரூபாயைக் கொடுத்தார். 180 ரூபாய் போக மீதி சில்லரையை அவரிடம் கொடுத்தீர்கள்?

கவுரிசங்கர்: ஞாபகம் இல்லை

வழக்கறிஞர்: கடையின் உரிமையாளரான ரமேஷிடம் அந்தத் தொகையை ஒப்படைத்தீர்கள்?

கவுரிசங்கர்: ஞாபகம் இல்லை

வழக்கறிஞர்: எதிரிகளுக்கு பயந்து கொண்டும், அவர்கள் கேட்டுக்கொண்டன்பேரிலும் நீங்கள் இங்கே பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள் என்கிறேன்...

கவுரிசங்கர்: இல்லை


இவ்வாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் அவரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜிகே, கவுரிசங்கரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.


ஜிகே: போலீசார் உங்களிடம் எப்படி சொல்லச் சொன்னார்களோ அப்படி சாட்சியம் அளித்தீர்கள். அப்படித்தானே?

கவுரிசங்கர்: ஆமாம்


இவ்வாறு எதிர் தரப்பு வழக்கறிஞர் ஜிகே குறுக்கு விசாரணை நடத்தினார்.

 

murder

 

செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையின்போது அரசுத்தரப்பு சாட்சிகளான குமார், கவுரிசங்கர், தினேஷ்குமார், பாலகிருஷ்ணன், ரமேஷ் ஆகிய ஐந்து சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். இவர்களில் முக்கிய சாட்சியான கவுரிசங்கர், மதிய உணவு இடைவேளையின்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த யுவராஜ் தரப்பு ஆள்களுடன் நெருக்கமாக பேசிக்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சாட்சிகள் விசாரணை மாலை 5 மணிக்கு முடிந்தது. இதையடுத்து, அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணை வரும் 9.11.2018ம் தேதி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஒத்திவைத்து, நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார். அன்றைய தினம், தேவூர் எஸ்எஸ்ஐ பாஷ்யத்திடம் குறுக்கு விசாரணை நடைபெறுகிறது.

சார்ந்த செய்திகள்