புதிய மாவட்டமான தென்காசி மாவட்டத்துடன் கடையம், மற்றும் ஆழ்வார்குறிச்சி (சப்-டிவிசன்) குறு வட்டங்கள் இணைக்கப்பட்டன். இதைத் தொடர்ந்து அதன் வரையரைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்த இரண்டு குறு வட்டங்களின் வருவாய் மற்றும் காவல் சரகங்கள் அம்பை டி.எஸ்.பி. கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்தச் சூழலில் இவைகள் ஆலங்குளம் சப்டிவிசனுடன் இணைக்கப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வருகின்ற நிலையில் அரசுத் தரப்பிலோ சாதகமான பதில் கிடைத்தாலும், அறிவிப்பாணை பிறப்பிக்கப்படவில்லை.
இதனால் மக்களிடத்தில் கடும் குழப்பங்கள் நிலவுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். குற்றச் சம்பவங்கள் மற்றும் விவகாரங்கள் பொருட்டு எந்த சப்டிவிசனுக்குச் செல்வது என்ற நிலையில் பல்வேறு பிரச்சனைகள் கிளம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் குற்றச் சம்பவங்களும் அதிகாரிக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினரோ, ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டத்திற்கோ அனுமதியின் பொருட்டு எந்த சப்டிவிசன் செல்வது என்று திணறுகின்றனர்.
இந்தத் தவிப்பிலிருந்து போலீஸ் அதிகாரிகளும் தப்பவில்லை. ஒரு குற்றவாளி சிக்கினால் அதன் பொருட்டு, எந்த சப்டிவிசன் டி.எஸ்.பி.யிடம் ஆலோசனை பெறுவது, குண்டர் சட்டம் என்றால் எந்த கலெக்டரிடம் அணுக வேண்டும் என்று அதிகாரிகளே மன உனைச்சலால் திணறி வருகின்றனர். பரிதவிப்பிலிருக்கிறார்கள். அதற்கு ஒரே தீர்வு ஆழ்வார்குறிச்சி, மற்றும் கடையம் எந்த சப்டிவிகளின் கீழ் செயல்படுவது என்பதை தொடர்புடைய உயரதிகாரிகள் தான் வெளிப்படுத்த வேண்டும் என்று பலதரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
சந்தர்ப்ப சூழ்நிலைகள் குற்றச் சம்பவங்களுக்கு வழி ஏற்படுத்திவிடாமலிருப்பதற்காக உடனடி நடவடிக்கை அத்யாவசியம் என்பதே யதார்த்தமாகத் தெரிகிறது.