Skip to main content

        மகாத்மாகாந்தி வருகையின் நினைவாக சிறப்பு அஞ்சல் உறை 

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

 

    மகாத்மாகாந்தி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்ததன் நினைவை போற்றும் வகையில் அஞ்சல்துறையின் சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது. திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அம்பேஷ் உப்மன்யு இ.அ.ப., முன்னிலை வகித்தார்.  அஞ்சல் உறையை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது... 

 

g


    நாடு முழுவதும் தேச தந்தை காந்தியடிகளின் 150 -வது பிறந்த நாள் ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்திய அஞ்சல் துறையின் சார்பிலும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக காந்தியடிகள் 21.09.1927 அன்று புதுக்கோட்டைக்கு  வருகை தந்துள்ளதை  நினைவு கூறும் வகையில் இன்று வெள்ளிக் கிழமை தபால் துறையின் சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது.  இதன்மூலம்  புதுக்கோட்டைக்கு காந்தியடிகளின் வருகை அகில இந்திய அளவில் பேசப்படும்.


    மேலும் காந்தியடிகள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தபோது வரவேற்புக்குழு மூலம் வரவேற்புரை வாசிக்கப்பட்டது. அதன் நகல் இன்றும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி  இராமசந்திரபுரம் உயர்நிலைப் பள்ளிக்கு காந்தியடிகள் வருகை தந்து மாணவ, மாணவியர்களை கதர்  ஆடை அணிய அறிவுறுத்தியும்,  அவர்கள் தினமும்  அரைமணி நேரம் ராட்டையில் நூல் நூற்க அறிவுறுத்தியும் குறிப்பு எழுதியுள்ளார். 


    இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேச தந்தை காந்தியடிகள் வருகையினை புதுக்கோட்டை மாவட்ட மக்கள் என்றும் நினைவு கொள்வதுடன் காந்தியடிகளின் கொள்கையை அனைவரும் பின்பற்ற உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு பேசினார்.


    நிகழ்ச்சியில்  புதுக்கோட்டை சுதந்திர போராட்ட தியாகி நாகப்பன், புதுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர்  சுவாதி மதுரிமா, உதவி கண்காணிப்பாளர் குருஷங்கர், புதுக்கோட்டை தலைமை தபால் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்