
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இன்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்றார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து திருவாரூர் மற்றும் நாகை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாங்குடிக்கு செல்லும் வழியில் கூடூர் கடைவீதியில் இந்த மறியல் நடைப்பெற்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் அரசு செய்யவில்லை என்று மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது அங்கு அவசர அவசரமாக வந்த போலீசார், மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் காமராஜ், முதல் அமைச்சர் வருகிறார். சற்று உதவி செய்யுங்கள். மறியலை கைவிடுங்கள் என்று பேசி பார்த்தார். இருப்பினும் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். ஒருவழியாக பேசி போராட்டத்தை கைவிட வைத்தார் காமராஜ்.
இதனிடையே திருவாரூரில் மழை பெய்தது. மோசமான வானிலை காரணமாக பயணத்தை ரத்து செய்துவிடலாம் என்ற முடிவு செய்த எடப்பாடி பழனிசாமி, பயணத்தை ரத்து செய்துவிட்டு திருச்சி திரும்பினார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 5 நாள் கழித்து பார்க்க வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் மழை காரணமாக பயணத்தை முதல் அமைச்சர் ரத்து செய்தது மேலும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.