இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினார்கள். இந்நிலையில், ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், பாமக தரப்பு ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
இதன் உச்சகட்டமாக பாமகவைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் ஒருவர், நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் தருவதாக கூறினார். இதனையடுத்து, சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கிடையே, அப்படத்தின் இயக்குநர் ஞானவேல், படத்தில் வந்த சில காட்சிகள் யாருக்காவது மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகக் கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். இந்நிலையில், சிதம்பரம் நீதிமன்றத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், அமேசான் நிறுவனம் மீது அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினரிடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.