சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், ஓராண்டு கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.
சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2022-2023ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியானது நடப்பு ஆண்டு முதல் ஓராண்டு கால பயிற்சியாகவும், இரு பருவங்களாகவும் நடக்கிறது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, ஆகஸ்ட் 1- ஆம் தேதி 17 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 18- ஆம் தேதி மாலை 05.30 மணி வரை, அலுவலகத்தில் 100 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, உரிய ஆவண நகல்களுடன் பதிவு அஞ்சல் அல்லது கூரியர் மூலம் ஆகஸ்ட் 22- ஆம் தேதி மாலை 05.30 மணிக்குள் பயிற்சி நிலைய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கூட்டுறவு பட்டய பயிற்சியுடன், கணினி பயிற்சி, நகை மதிப்பீடு பயிற்சிகளும் வழங்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பங்களை பெறவும், சமர்ப்பிக்கவும், 'முதல்வர், நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 516, கடலூர் மெயின் ரோடு, காமராஜர் நகர் காலனி, சேலம் - 636014' என்ற முகவரியில் அணுகலாம். மேலும் விவரங்களை, 0427 - 2240944 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இப்பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு கூட்டுறவுத்துறை, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார்.