திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பைபாஸ் சாலை அருகில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பகுத்தறிவு தந்தை பெரியார், காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளையும், திமிழனத்தின் விடிவெள்ளியாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க நாளையும் இணைத்து முப்பெரும் விழா கொண்டாட வேண்டும் என 1985ம் ஆண்டு தலைவர் கலைஞர் அறிவித்தார். அன்றிலிருந்து இன்று வரை நாம் இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்திவருகிறோம். இந்த ஆண்டுக்கு கூடுதலாக இரண்டு சிறப்புகள் உள்ளன. இந்த ஆண்டு நம்மையெல்லாம் ஆளாக்கிய கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நமது மாபெரும் இயக்கத்தின் பவள விழா இன்றிலிருந்து துவங்குகிறது. கொட்டும் மழையில் பிறந்ததால் என்னவோ உடனே வளர்ந்தது தி.மு.கழகம். ஆல மரமாக வளர்ந்துள்ள இந்த கழகத்தின் பவளவிழாவை ஓராண்டுக்கு நாம் கொண்டாடப்போகிறோம். அந்தவகையில், இன்று நாம் ஐம்பெரும் விழாவை நடத்திக்கொண்டிருக்கிறோம். தொண்டர்களை தம்பிகள் என அழைத்தவர் அண்ணா, உடன் பிறப்புகள் என அழைத்தவர் கலைஞர், நான் உங்களில் ஒருவன். தொண்டர்களால் கட்சித் தலைவனாகவும், முதலமைச்சராகவும் ஆக்கப்பட்டவன் நான்.
மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கக் கூடிய போர்க்களத்தின் பயணத்தின் இடையே இந்த முப்பெரும் விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 1949ம் ஆண்டு திமுக உதயமானது. 75 ஆண்டுகளாக தமிழ் சமுதாயத்தின் காவல் அரணாக நமது இயக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 1967ம் ஆண்டு நாம் முதல்முறையாக ஆட்சிக்கு வருகிறோம். அதன்பிறகு 71, 89, 96, 2006, 2021 என மொத்தம் ஆறு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறோம். ஒரு பக்கம் ஆட்சி, மறுபக்கம் கட்சி இந்த இரண்டின் மூலமாக தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களைவிட தலை சிறந்த மாநிலமாக மாற்றிக்கொண்டுவருகிறோம். இடையிடையே கொள்கை அற்ற அதிமுக கூட்டம், ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை சீர் அழித்தாலும், அதனையும் திருத்தி தமிழ்நாட்டை வளர்த்துவருகிறோம். இன்று தமிழ்நாட்டின், தமிழ்நாட்டு மக்களின், தமிழினத்தின் வளர்ச்சி பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தக்கூடிய வளர்ச்சியாக இருக்கிறது.
தமிழ்நாட்டு மாநிலத்தின் உரிமைகளை சிதைப்பதன் மூலமாக, நமது மாநில மக்களின் வாழ்வை அழிக்க பார்க்கிறார்கள். அதனைத் தான் பா.ஜ.க. செய்துகொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. மூலமாக மாநில உரிமையை பறித்தது. ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கியமானது நிதி ஆதாரம்; வரி வருவாய். இதன் மூலம், மாநில அரசை செயல்படவிடாமல் முடக்குகிறது. மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டது மாநில அரசு. மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலைவசதிகள், கடன்கள், மானியங்கள், பெண்கள் முன்னேற்றம், விளிம்பு நிலை மக்களுக்கான உதவிகள், இவை எல்லாவற்றையும் வழங்கவேண்டிய கடமை மாநில அரசுக்கே உள்ளது. இதனை செய்துகொடுப்பதற்கு நிதி வேண்டும். அப்படிபட்ட நிதி ஆதாரங்களை கிடைக்கவிடாமல் செய்வதற்கு ஜி.எஸ்.டி. கொண்டுவந்து, நிதி வருவாய் வாசலை அடைத்தார்கள். வசூல் செய்யும் நிதியை முறையாக பிரித்தும் கொடுப்பதில்லை.
கல்வி மிகமிக முக்கியமானது. ஒவ்வொரு மாநில அரசும், அங்கு வாழும் பெரும்பான்மையான மக்களின் பண்பாடு, அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியை வழங்கும். புதியக் கல்வி கொள்கை என சொல்லி நம் மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள். ஒன்றிய அரசு சொல்லும் கல்வி வளர்ச்சியை தமிழ்நாடு எப்போதோ எட்டிவிட்டது. கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்கும் முயற்சிதான் அவர்கள் கொண்டுவரக்கூடிய கல்விக் கொள்கை.
மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டது நீட் தேர்வு. லட்சக் கணக்கில் செலவு செய்தால் தான் தேர்ச்சி பெற முடியும் எனும் நிலையை உருவாக்கிவிட்டார்கள். சில தனியார் பயிற்சி மையங்களின் லாபத்திற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அனிதா முதல் ஜெகதீசன் வரை ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்கள். இது தற்போது வடமாநிலங்களிலும் நடக்கத்துவங்கிவிட்டது. கடந்த 14ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி, நீட் தேர்வுக்காக படிக்கவந்து ராஜஸ்தானில் தற்கொலை செய்துகொண்டார். இதுமட்டுமல்ல, கடந்த ஒரு ஆண்டில் 22 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இத்தனை தற்கொலைகளுக்கான காரணத்தை பா.ஜ.க. ஆராய்ந்ததா? இரக்கம் அற்ற அரசாக மோடி அரசு இருக்கிறது.
நேற்று ஒரு மீம்ஸ் பார்த்தேன். அதில் பெண்கள், ‘எங்கள் முதல்வர் சொன்ன ரூ. 1000 வந்துவிட்டது. பிரதமர் சொன்ன ரூ. 15 லட்சம் என்ன ஆனது’ என இருந்தது. தற்போது வைரலாகிவருகிறது. தமிழ்நாட்டிற்கு எத்தனை வாக்குறுதிகளைக் கொடுத்தார் பிரதமர். ஆனால், எதனையும் நிறைவேற்றவில்லை. உதாரணத்திற்கு 2015ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் அமைப்போம் என்றார். ஆனால், தற்போது தான் டெண்டரே விட்டுள்ளனர். இதனையெல்லாம் யாரும் நினைவு செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் மற்றப் பிரச்சனைகளை கிளப்பி குளிர்காயப் பார்க்கிறார்கள்.
கடந்த 9 வருடத்தில் என்ன சாதனை செய்திருக்கிறார்கள் என்றால், 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டரின் விலை ரூ.420. இதனை மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 1200க்கு உயர்த்தியதுதான் மோடியின் சாதனை. தற்போது தேர்தல் வரும் காரணத்திற்காக கண்துடைப்பாக வெறும் ரூ. 200-ஐ குறைத்துள்ளனர். 2014ம் ஆண்டு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 71. தற்போது ஒரு லிட்டர் ரூ. 102. ஒன்றிய அரசின் வரியை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளனர். டீசல் ரூ. 55. தற்போது 94 ரூபாய். இதில் ஒன்றிய அரசின் வரி ஏழு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் பா.ஜ.க. அரசு ரூ. 100 லட்சம் கோடியை கடன் வாங்கியுள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்தியாவின் கடன் ரூ. 55 லட்சம் கோடி. இந்த 9 ஆண்டுகளில் அது ரூ. 155 லட்சம் கோடியாக மாறியுள்ளது.
பெரிய நிறுவனங்களுக்கு ரூ. 14 லட்சம் கோடியை வாரக்கடன் என சொல்லி தள்ளுபடி செய்துள்ளனர். பணவீக்கம் அதிகரித்துள்ளது. இப்படி வேதனை மட்டுமே மக்களுக்கு தந்துள்ள பா.ஜ.க. அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும். சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி. அறிக்கையின்படி பார்த்தால் ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் சிக்கியிருப்பது சி.பி.ஐ. அதிகாரிகள் என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. இத்தகைய ஊழல் முகத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். நம் முன் இருக்கும் முக்கிய கடமை இந்த ஊழல் முகத்தை கிழிக்க வேண்டியது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் நம் கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுக்க வெற்றி பெற வேண்டும் நமது ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால், 15 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி எழுப்ப முடியுமா முடியாதா? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா முடியாதா? தமிழ்நாட்டுக்கு தேவையான ஏராளமான இரயில் திட்டங்களை நம்மால் கொண்டுவர முடியுமா முடியாதா? புதிய விமான நிலையங்களையும் மெட்ரோ இரயில்களையும் இயக்க முடியுமா முடியாதா? நம் இந்தியா கூட்டணி ஆட்சி அமையுமானால், இவையெல்லாம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரமுடியும்.
இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித்தர நம்மால் முடியும். இங்கு நாம் அமல்படுத்திக்கொண்டிருக்கிற திராவிட மாடல் திட்டங்களை இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் கொண்டு சேர்க்கமுடியும். இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்த்தல் வரப்போகிறது” என்றார்.